ராமர் பெயரில் வசூல் நடத்திய கோயில்: கையகப்படுத்தியது அறநிலையத்துறை
ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் ராமர் பெயரில் மிதக்கும் கல் வைத்து, பக்தர்களிடம் வசூல் வேட்டை நடத்திய, கோயில் மற்றும் மடத்தை, இந்து அறநிலையத்துறையினர் தங்கள் கட்டுபாட்டில் கொண்டு வந்தனர். ராமேஸ்வரம் சீதா தீர்த்தம் அருகே, தனியார் நிர்வகித்து வந்த துளசி பாவா மடத்தில், பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இதனுள் தண்ணீரில் மிதக்கும் சுண்ணாம்பு கல்லை, தொட்டியில் போட்டு, இலங்கைதனுஷ்கோடி இடையே ராமர்பிரான் பாலம் அமைக்க, பயன்படுத்தி "மிதவை கல் இதுதான் எனக் கூறி, பக்தர்களிடம் வசூல் வேட்டை நடத்தினர்.இதுகுறித்து, இந்து அறநிலையத்துறைக்கு, பக்தர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, சென்னை ஐகோர்ட்டில் அறநிலையத் துறை வழக்கு தொடர்ந்தது. கோர்ட் உத்தரவுப்படி, பிப்.1 பஞ்சமுக ஆஞ்சநேயர், துளசி பாவா மடத்தை ராமநாதபுரத்தில் உள்ள இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் முருகானந்தம் தலைமையில் ஊழியர்கள் கையப்படுத்தினர்.இதற்கான நோட்டீசை, மடத்தின் நிர்வாகி மோகன்தாசிடம் வழங்கினர். ஒரு நகலை கோயில் சுவரில் ஒட்டினர். "மிதக்கும் கல்லை காட்டி பக்தர்களிடம் பணம் வசூலிக்கக் கூடாது என, எச்சரித்தனர். இதற்கு மடத்தின் நிர்வாகி எதிர்ப்பு தெரிவித்தார். கையகப்படுத்திய கோயிலுக்கு,இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் முருகானந்தம், தக்கராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கூறியதாவது: இரண்டு ஆண்டுகளாக, இக்கோயிலில், கூடுதலான வருவாய் கிடைப்பதாக வந்த தகவøலையடுத்து, எங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. இங்குள்ள ராமர், லட்சுமணர், சீதா உள்ளிட்ட ஐந்து உலோக சிலைகள், 16 மிதவை கற்களை கையப்படுத்தினோம். இம்மடத்திற்கு சொந்தமான, 75 சென்ட் நிலம் விற்கப்பட்டுள்ளது, இதை சட்டரீதியாக மீட்க, நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
இதுகுறித்து துளசிபாவா மடம் நிர்வாகி மோகன்தாஸ் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள பிற ஆதீன மடம் போன்று தான், இதை நிர்வகித்து வருகிறோம். முன் அறிவிப்பின்றி, இந்து அறநிலையத்துறையினர் எங்கள் மடம், கோயிலை கைப்பற்றியதை கண்டிப்பதுடன், மீட்க, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன், என்றார்.