உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வறட்சி நீங்கி மழை பெய்ய வேண்டி கழுதைகளுக்கு திருமணம்

வறட்சி நீங்கி மழை பெய்ய வேண்டி கழுதைகளுக்கு திருமணம்

அன்னூர்: கடும் வறட்சி நீங்கி, மழை பெய்ய வேண்டி, கோவை அருகே கழுதைகளுக்கு திருமணம் செய்யப்பட்டது.


கோவை அருகே அன்னூர் வட்டாரத்தில், பெரும்பாலும் விவசாயத்தை நம்பி மக்கள் உள்ளனர். சில மாதங்களாக பருவ மழை பெய்யவில்லை. அத்திக்கடவு அவிநாசி திட்டத்திலும், குளம், குட்டைகளுக்கு, நீர் நிரப்பவில்லை. நிலத்தடி நீர்மட்டம் 1,200 அடிக்கு கீழ் சென்று விட்டது. பயிர்கள் காய்கின்றன. தென்னை, பனை மரங்களில் ஓலைகள் கருகி வருகின்றன. இதையடுத்து, லக்கேபாளையம் கிராம மக்கள் ஊர் கூட்டம் நடத்தி, மழை வேண்டி பஞ்ச கல்யாணிக்கு (கழுதைகள்) திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து, ஈரோடு மாவட்டம், நல்லூரிலிருந்து, ஆண் மற்றும் பெண் கழுதைகள் வரவழைக்கப்பட்டன. நேற்று, காலை ஆண் கழுதைக்கு பட்டு வேட்டியும், பெண் கழுதைக்கு பட்டுச்சேலையும் அணிவிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டது. எல்.கோவில்பாளையம், விநாயகர் கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட கழுதைகள் ஊர்வலமாக மேலதாளத்துடன் லக்கேபாளையம் சுப்பிரமணியர் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டன. அங்கு பூசாரி நாச்சிமுத்து கழுதைகளுக்கு திருமணம் நடத்தி வைத்தார். பொதுமக்கள் கழுதைகளுக்கு அட்சதை தூவி வாழ்த்தினர். ஊர் பெரியவர் காளிச்சாமி கூறுகையில், "இக்கோவில், 200 ஆண்டு பழமையானது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பும், இதுபோல் மழை வேண்டி பஞ்ச கல்யாணி திருமணம் செய்தோம். மழை பெய்தது," என்றார். கிராம மக்கள் திருமணத்திற்கு மொய் எழுதினர். அனைவருக்கும் கம்பங்கூழ் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !