மதுரை: விளாச்சேரியில் தயாராகும் கிருஷ்ணர் சிலைகள்
திருநகர்: விளாச்சேரியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பொம்மை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளன. சீசனுக்கு தகுந்தாற்போல் சுவாமி, அரசியல் தலைவர்களின் சிலைகள், மூன்று இஞ்ச் முதல் 10 அடி உயரம்வரை விநாயகர் சிலைகள், இரண்டரை அடி உயர மெகா சைஸ் அகல் விளக்குகள், கிறிஸ்துமஸ் குடில்கள் ஆகியவற்றை களிமண், காகிதக் கூழ், பிளாஸ்டர் ஆப் பாரிஸ், சிமென்டில் தயாரிக்கின்றனர்.
ஹரிகிருஷ்ணன் கூறியதாவது: பரம்பரை பரம்பரையாக பொம்மை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். விரைவில் கிருஷ்ண ஜெயந்தி வருவதால் வழக்கமாக தயாரிக்கும் கிருஷ்ணர் சிலைகளுடன் இந்தாண்டு கிருஷ்ணர் ‘செட்’ கள் தயாரிக்கிறோம். ஆறு முதல் ஒரு அடி வரை களிமண்ணிலும், ஒரு அடி முதல் நான்கு அடி உயரத்தில் காகித கூழாலும் தயாரிக்கிறோம்.
சுற்றுச் சூழலை கருத்தில் கொண்டு களிமண், காகிதக்கூழ் ஆகியவற்றால் மட்டுமே தயாரிக்கிறோம். தமிழகத்தின் பெரும்பாலான கோயில்கள், காதி விற்பனையகங்களில் எங்கள் சிலைகள் விற்பனைக்கு உள்ளன.
வெளி மாநிலத்தினரின் ஆர்டரின் பேரிலும் தயாரித்து கொடுக்கிறோம். கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்தாண்டு கிருஷ்ணர் சிலைகளை மக்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர் என்றார்.