விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை தயாரிப்பு பணிகள் மும்முரம்
காஞ்சிபுரம்: வரும் செப்., 14ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளதையொட்டி, விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
காஞ்சிபுரத்தை அடுத்த கன்னிகாபுரம், கருக்குப்பேட்டை, அய்யம்பேட்டை பகுதி கைவினை கலைஞர்கள் சிலை தயாரிப்பு தொழிலில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், சிலை செய்யும் பணிகள் முடிந்து, வண்ணம் தீட்டும் பணிகள் தொடங்கப்பட உள்ளன.
அரசின் வழிகாட்டுதல்களின்படி, ரசாயனப் பொருட்களை தவிர்த்து, மரவள்ளிக்கிழங்கு மாவு, கிழங்கு மாவுப் பசை மற்றும் வண்ணங்களை பயன்படுத்தி இச்சிலைகள் வடிவமைக்கப்படுகின்றன. 1 அடி முதல் 10 அடி உயரம் வரை தயாரிக்கப்படும் சிலைகள் குறைந்தபட்சம் 100 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன.
இங்கு தயாரிக்கப்படும் சிலைகள் சென்னை, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.
இதுகுறித்து கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்த சிலை தயாரிப்பு தொழிலாளி சிவலிங்கம் கூறியதாவது:
ஆண்டின் ஆறு மாதங்கள் மட்டுமே இதில் வேலைவாய்ப்பு கிடைக்கும். சிலை தயாரிப்பிற்கான மூலதனத் தொகையை திரட்டுவது பெரிய சவாலாக உள்ளது. முறையான வங்கி கடன் கிடைக்காததால், அதிக வட்டிக்கு கடன் வாங்கி தொழில் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறோம்.
இதனால், லாபத்தில் பெரும் பகுதி வட்டி கட்டுவதற்கே சரியாகிவிடுகிறது. எனவே, அரசு கைவினைஞர்களுக்கு குறைந்த வட்டியில் வங்கிகள் மூலம் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.