திருத்தணியில் ஜாத்திரை விழா; அம்மன் கோவிலில் பொங்கலிட்டு வழிபாடு
திருத்தணி: திருத்தணி நகரில், ஜாத்திரை விழாவை ஒட்டி, அம்மன் கோவில்களில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
திருத்தணி மடம் கிராமத்தில், இன்று ஜாத்திரை விழா நடந்தது. இதையொட்டி, படவேட்டம்மன் கோவிலில், காலை 8:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, கோவில் வளாகத்தில் திரளான பெண்கள் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். முன்னதாக கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. அதன்பின், மாலை 4:00 மணிக்கு, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பூங்கரகத்துடன் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த விழாவில், திருத்தணி நகராட்சி தலைவர் சரஸ்வதி, தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் பூபதி உட்பட, முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். இதே போல், திருத்தணி அடுத்த மாம்பாக்கம் கிராமத்தில், கடந்த பத்து ஆண்டுகளுக்கு பின், நேற்று ஜாத்திரை விழா வெகு விமரிசையாக நடந்தது. அங்கு, அசம்பாவிதம் நடக்காமல் தடுப்பதற்கு, திருத்தணி கூடுதல் எஸ்.பி., ஷுபம் திமான் தலைமையில், 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இரவு, உற்சவர் கங்கையம்மன் ஊர்வலம் நடந்தது. அதன்பின் கும்பம் கொட்டும் நிகழ்ச்சி நடந்தது.