உத்தரகோசமங்கை மங்கைப் பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம்
உத்தரகோசமங்கை;உத்தரகோசமங்கை கண்மாய்க்கரை அருகே மங்கை பெருமாள் என்று அழைக்கப்படும் கோவிந்த பெருமாள் கோயில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மதுரையில் அழகர் தனது இருப்பு நிலையை அடைந்தவுடன் பக்தர்களுக்கு தலுகை எனப்படும் மண்வெட்டி மூலமாக சாதம் கிளறி அன்னதானம் வழங்கப்படும், சிறப்பு பெற்ற கோயில் ஆகும். இந்நிலையில் கோயில் புதியதாக புனரமைக்கப்பட்டு, கடந்த ஆக., 17 அன்று முதல் கால யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது.
இன்று காலை 7:00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜைக்கு பிறகு கோ பூஜை, விஸ்வரூப தரிசனம், வேதபாராயணம், பூர்ணாகுதி உள்ளிட்டவர்களுக்கு பிறகு பூமி தேவி, நீளாதேவி சமேத கோவிந்த பெருமாள் கோபுர விமான கலசம் மற்றும் கருடன், பக்த ஆஞ்சநேயர் சுவாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் சன்னதி கலசங்களில் மீது பட்டாச்சாரியார் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார். மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை உத்தரகோசமங்கை யாதவர் சங்கத்தினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.