தி.நகர் சிவ -– விஷ்ணு கோவிலில் மஹா கும்பாபிஷேகம் விமரிசை
தி.நகர்: தி.நகரில் உள்ள சிவ – விஷ்ணு கோவிலில், கும்பாபிஷேக விழா நேற்று விமரிசையாக நடந்தது.
தி.நகர், உஸ்மான் சாலையில் சிவ -– விஷ்ணு கோவில் உள்ளது. வரசித்தி விநாயகர், வள்ளி தேவசேனா சமேத முருகன், பார்வதியுடன் கேதாரீஸ்வரர், சிவகாம சுந்தரி சமேத நடராஜர், ஆஞ்சநேயர் உள்ளிட்டோருக்கு தனி சன்னிதிகள் உள்ளன.
இக்கோவிலில், 50 லட்சம் ரூபாய் செலவில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மூலவர், உற்சவர், பரிவார மூர்த்திகளின் சிலைகள் புதுப்பிக்கப்பட்டு, வர்ணம் பூசப்பட்டது. கோவிலில் உள்ள இரு கொடி மரங்கள், விமான, ராஜகோபுர கலசங்களுக்கு, தங்க முலாம் பூசப்பட்டது.
இம்மாதம் 21ம் தேதி முதல் கும்பாபிஷேக விழாவுக்கான பூஜைகள் நடந்து வந்தன. கோ பூஜை, அங்குராரப்பணம், யாகசாலை பிரவேசம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.
இந்நிலையில், நேற்று காலை 9:30 மணிக்கு, ராஜகோபுரம் மற்றும் அனைத்து விமான கலசங்களுக்கும், ஒரே நேரத்தில் புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள், திருவாராதனை, பிரம்ம கோஷம், வேத சாற்று, திவ்யபிரபந்த சாற்றுமறை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.
இந்த மஹா கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை, மாம்பலம் சன்மார்க்க சம்வர்த்தினி சபா மேற்கொண்டது. ஏராளமான பக்தர்கள், கும்பாபிஷேகத்தில் கூடி சுவாமியை தரிசித்தனர்.