உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் கலை பொக்கிஷங்கள் அழியும் அவலம்

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் கலை பொக்கிஷங்கள் அழியும் அவலம்

சென்னை: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் உள்ள சோழர் கால கலைப் பொக்கிஷங்களான சிற்பங்கள், ஓவியங்கள் அழியும் நிலையில் உள்ளதால், அவற்றை பழமை மாறாமல் பாதுகாக்க வேண்டும் என, சென்னை அரசு கவின் கலைக் கல்லுாரி பேராசிரியர் மற்றும் மாணவ – மாணவியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில், 1,400 ஆண்டுகள் பழமையான வேதகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், சென்னை அரசு கவின் கலைக் கல்லுாரியின் பதிப்பு ஓவியத் துறை மாணவர்கள், சிறப்பு வரைகலைப் பயிற்சியை இரு நாட்களுக்கு முன் மேற்கொண்டனர். பாதுகாக்க வேண்டும் கடந்த 13ம் நுாற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டதாக கூறப்படும் இக்கோவில், கஜபிருஷ்ட கருவறை அமைப்புடையது.

அதன்பின், 17ம் நுாற்றாண்டில் நாயக்கர்களால் சீரமைக்கப்பட்டது. முன்மண்டபம், சுற்றுச்சுவர், வசந்த மண்டபம், கோபுர வாசல்களில் கவின்மிகு சிற்பங்கள் உள்ளன. கோவிலின் வலதுபுறம் உள்ள தேரடி மண்டப விதானத்தில், 18ம் நுாற்றாண்டைச் சேர்ந்த அபூர்வ வண்ண ஓவியங்களும் இடம் பெற்றுள்ளன. பழந்தமிழர்களின் கலை நுணுக்கம், செய்நேர்த்தி, வடிவக்கலை அம்சங்களை நேரில் ஆய்வு செய்து, சிறந்த கலைப் படைப்புகளை உருவாக்கும் நோக்கில் மாணவர்கள் பயிற்சி மேற்கொண்டனர்.

நுணுக்கமான சிற்பங்கள், ஓவியங்களை வரைகோடுகளாகவும், வண்ணங்களாகவும் ஆவணப்படுத்தினர். இதில், கலைநயமிக்க ஓவியங்கள் அழியும் தருவாயில் உள்ளதாகவும், அவற்றை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மாணவ – மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, கல்லுாரி பதிப்பு ஓவியத் துறை தலைவர் கு.கவிமணி கூறியதாவது:

வேதகிரீஸ்வரர் கோவில் நந்தி மண்டபத்தில் உள்ள சிலைகள் மற்றும் சிறப்புமிக்க துர்க்கை அம்மன் சிலைகள் எண்ணெய் படிந்து, சுத்தம் செய்யப்படாமல் உள்ளன. சுத்தம் செய்யாமல் விட்டால், விரிசல் ஏற்பட்டு அவை அழிய நேரிடும். கோவில் மண்டப விதானங் களில் வரையப்பட்டுள்ள ஓவியங்களும் மெல்ல அழிந்து வருகின்றன.
அருங்காட்சியகம் எனவே, சிலைகள் மற்றும் ஓவியங்களை பாதுகாக்க அரசு முன்வர வேண்டும். வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில் வழிபாடுகளில் பயன்படுத்தப்படும் உலோகச் சிற்பங்கள் உள்ளிட்ட கைவினைப் பொருட்களை அறையில் பூட்டி வைக்காமல், ஆன்மிக அருங்காட்சியகமாக காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாணவ – மாணவியரின் களப்பயிற்சிகளுக்கு ஹிந்து சமய அறநிலையத் துறை தொடர்ந்து ஊக்கமளிக்க வேண்டும். இதனால், இளம் தலைமுறையினர் வழிபாடு சார்ந்த கைவினைப் பொருட்களின் கலைத் திறன், மரபுகளை அறிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படும். தமிழகம், கலைகளால் முழுமை பெற்ற மாநிலம். ‘யுனெஸ்கோ’ அங்கீகாரங்களை அதிகமாகப் பெற்றதும் நம் மாநிலமே. எனவே, பழந்தமிழர் திறமைகளை சமகாலத்திலும் அனைவரும் அறியும் வகையில் கோவில்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !