உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூர்: பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படிபட்ட பெருமான் சிவாலயங்களில் பக்திப்பரவசம்

திருப்பூர்: பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படிபட்ட பெருமான் சிவாலயங்களில் பக்திப்பரவசம்

திருப்பூர்: இறைவன் மனிதனுக்காகக் கூலி ஆளாய் வந்து மண் சுமந்த அற்புத லீலையை, பக்தி உணர்வோடு நெஞ்சில் ஏந்திக் கொண்டாடினர், திருப்பூர் பக்தர்கள்; ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், வாணிய செட்டியார் சமுதாயம் சார்பில் 74-ம் ஆண்டு ஆவணி மூலப்பிட்டுத் திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

ஆண்டுதோறும் ஆவணி மாத வளர்பிறை மூல நட்சத்திர நாளில், சிவபக்தியில் சிறந்த வந்தியம்மையின் பிட்டுக்காக சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடலை நினைவுகூரும் வகையில் இவ்விழா முன்னெடுக்கப்படுகிறது.

நேற்று மாலை 6:00 மணிக்கு விஸ்வேஸ்வரர் – விசாலாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு, பிட்டுக்கு மண் சுமந்த படல திருக்காட்சியும், மகாதீபாராதனையும் நெகிழ்ச்சியோடு நடந்தேறின.

கோவில் வசந்த மண்டபத்தில் வரப்பு அமைத்துத் தண்ணீர் நிரப்பி, வைகை ஆற்றின் கரையாகவே பாவிக்கப்பட்டிருந்தது. சிவாச்சாரியார் ஒருவர் பிட்டுக்கு மண் சுமந்த சொக்கநாதரைப் போல வேடமேற்று, மண்வெட்டியும் கூடையுமாக வந்து மண் சுமக்கும் லீலையைத் தத்ரூபமாகச் செய்து காட்டினார்.

தொடர்ந்து, தரையில் உறங்குவது போல் இருந்த கூலியாளை பாண்டிய மன்னன் பிரம்பால் அடிக்க, அந்த அடி அகில உலகத்து உயிர்கள் மீதும் விழுந்ததாக ஐதீகம் கூறப்படும் படலக் காட்சியும் உணர்வுபூர்வமாக நிகழ்த்தப்பட்டது.

சிவபெருமான் நிகழ்த்திய இந்த அற்புத வரலாற்றைச் சிவாச்சாரியார் விவரிக்க, பிட்டுக்கு மண் சுமந்த திருக்கோலத்தில் காட்சி தந்த இறைவனைத் தரிசித்து பக்தர்கள் பரவசமடைந்தனர். மகா தீபாராதனைக்குப் பின், கூடி இருந்த அனைவருக்கும் சுடச்சுட பிட்டுப் பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டன.

இதேபோல, நல்லுார் விஸ்வேஸ்வர சுவாமி கோவில் மற்றும் எஸ்.பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவிலிலும் ஆவணி மூலப்பிட்டுத் திருவிழா பக்திச் செறிவோடு கோலாகலமாக நடைபெற்றது.

திருப்பூர்: ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலில் ஆவணி மூலப்பிட்டு திருவிழா விமரிசையாக நடந்தது. பிட்டுக்காக மண் சுமந்த சொக்கநாதர்.

தரையில் உறங்குவது போல் நடித்த சொக்கநாதருக்கு பிரம்படி விழுந்தது. பிட்டுக்கு மண் சுமந்த திருக்கோலத்தில், விசாலாட்சியம்மனுடன் ஸ்ரீவிஸ்வேஸ்வரர்.

அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலிலும், ஆவணி மூல நட்சத்திரத்தையொட்டி பிட்டுக்கு மண் சுமந்த திருவிழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. அவிநாசி வாழ் வணிகப் பெருமக்களால் நடத்தப்பட்ட இவ்விழாவில், மூதாட்டிக்காக ஈசன் மண் சுமந்து பிரம்படி பெற்ற வரலாற்று லீலை நிகழ்வுறச் செய்யப்பட்டது. முன்னதாக, லிங்கேஸ்வரருக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து, ஆனந்தவல்லி சமேத சந்திரசேகரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பிட்டுக்கு மண் சுமந்த திருக்கோலத்தில் நான்கு ரத வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்த நிலையில், அனைவருக்கும் பச்சரிசி பிட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !