ஏ.ஐ., கண்ணாடி அணிந்து அருணாசலேஸ்வரர் கோவில் கருவறையை படம் எடுக்க முயன்ற இருவர்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஏ.ஐ., கேமரா பொருத்திய கண் கண்ணாடியை அணிந்து, கருவறையை படம் எடுத்த இருவர் மீது வழக்குப்பதிந்த போலீசார், பின்னர் ஜாமினில் விடுவித்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நேற்று மாலை வழக்கம் போல், வரிசையில் சென்று பக்தர்கள் தரிசனம் செய்தனர். அப்போது இரண்டாம் பிரகாரத்தில் வரிசையில் நின்றிருந்த இருவர், கண் கண்ணாடி மூலம் சுவாமி சன்னதியை படம் பிடித்தனர். பணியில் ஈடுபட்டிருந்த கோவில் ஊழியர்கள் சந்தேகமடைந்து கண்ணாடியை பறிமுதல் செய்தனர். ஏ.ஐ., கேமரா பொருத்தப்பட்ட கண்ணாடி என தெரிந்து, இருவரையும் டவுன் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த அகில்குமார், 23, வெங்கடரெட்டி, 23, என தெரியவந்தது. கோவிலில் தரிசனம் செய்வதை, ரீல்ஸ் வெளியிட கண்ணாடியை பயன்படுத்தியதாகவும் தெரிவித்தனர். கண்ணாடியை பறிமுதல் செய்த போலீசார், இருவர் மீதும் வழக்குப்பதிந்து விசாரித்து, பின் சொந்த ஜாமினில் விடுவித்தனர்.