உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரப்பாக்கம் வேண்டவராசி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா விமரிசை

காரப்பாக்கம் வேண்டவராசி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா விமரிசை

காரப்பாக்கம்: புதுப்பிக்கப்பட்ட காரப்பாக்கம் வேண்டவராசி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, இன்று விமரிசையாக நடந்தது.


பழைய மாமல்லபுரம் சாலை எனும் ஓ.எம்.ஆர்., காரப்பாக்கம், வேண்டவராசி அம்மன் கோவில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. சிறிய அளவில் இருந்த இந்த கோவில், கருங்கல்லில் பல்லவ மன்னர் காலத்து கலை சிற்பங்களுடன் புதுப்பிக்கப்பட்டது. இதில், 28 மண்டப துாண்கள், 44 அடியில் மூன்று நிலை கருவறை விமான கோபுரம், 18 அடி யாளி துாண்கள், சுதை சிற்பங்களாக வலது பக்கம் 18 அடி அஷ்டபுஜ மந்திர வாராகி, இடது பக்கம் 18 அடி அஷ்டபுஜ மகா துர்கை, 7 அடி துவார சக்திகள் என, சிற்ப சாஸ்திர முறைபடி கட்டப்பட்டது.


புதுப்பிக்கப்பட்ட இந்த கோவிலின் கும்பாபிஷேகம், 27ம் தேதி தொடங்கியது. தினமும் காலை, மாலை நேரத்தில் பல்வேறு பூஜைகள், தீபாராதனை நடந்தன.கடைசி நாளான இன்று காலை, வேண்டவராசி அம்மன், விமான கோபுரத்திற்கு ஸ்ரீ மஹா ப்ரித்யங்கிரா சுவாமிகள் மற்றும் திருவடிசூலம் ஸ்ரீ ஸ்ரீ மதுரை முத்துசுவாமிகள் புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகத்தை நடத்தினர். மாலையில் அம்மன் திருவீதி உலா நடந்தது. சிறப்பு விருந்தினராக, நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், சோழிங்கநல்லுார் தொகுதி த.வெ.க., – எம்.எல்.ஏ., சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்று, கும்பாபிஷேகம் நிகழ்ச்சியை சிறப்பித்தனர். சென்னையின் பல பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள், அம்மனை தரிசித்தனர்.இவ்விழாவை, கோவில் அறங்காவலரும், 198வது வார்டு கவுன்சிலருமான லியோ சுந்தரம் முன்னின்று நடத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !