திருச்செந்தூர் முருகன் கோவில் ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோவில் ஆவணித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. 12 நாட்கள் நடக்கும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, செப்டம்பர் 9ம் தேதி தேரோட்டம் நடக்க உள்ளது.
நேற்று மாலை வடக்கு ரதவீதியில் உள்ள 12ம் திருவிழா மண்டபத்தில் கொடிபட்டத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, அதனை யானை மீது வைத்து வீதி உலா நடத்தப்பட்டது. தொடர்ந்து, இன்று அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், காலை 5.15 மணியளவில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அப்போது, கூடியிருந்த பக்தர்கள் அரோகரா... அரோகரா... கோஷங்களை பக்தி பரசவத்துடன் எழுப்பினர். தொடர்ந்து, 12 நாட்கள் நடக்கும் இந்தத் திருவிழாவின் முதல் நாளான இன்று மாலை அப்பர் சுவாமிகள் கோவிலில் இருந்து தங்கச் சப்பரத்தில் வீதி உலா துவங்கி, உழவாரப் பணி நடைபெற இருக்கிறது. இரவு ஸ்ரீபெலி நாயகர் அஸ்திர தேவருடன் பல்லக்கில் 9 சந்திகளில் வீதி உலா வருகிறார். செப்டம்பர் 4ம் தேதி இரவு 7.30 மணிக்கு சுவாமியும், அம்மனும் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் வீதியுலா வருகின்றனர். மறுநாள் காலையில் கோ ரதத்திலும், இரவு வெள்ளி ரதத்திலும் வீதியுலா நடத்தப்படுகிறது. இப்படி, ஒவ்வொரு நாட்களும் விஷேச நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான செப்டம்பர் 9ம் தேதி காலை 7 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. ஆவணித்திருவிழாயொட்டி ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.