உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூத்தனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

கூத்தனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

கம்பம்: காமயகவுண்டன்பட்டி மலையடிவாரத்தில் உள்ள கூத்தனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது.

காமயவுண்டன்பட்டியை சேர்ந்த பெண் ஒருவர், மலையடிவார தோட்டங்களில் வேலை செய்பவர்களுக்கு தயிர் விற்க காட்டுப் பகுதிக்கு சென்று வருவது வழக்கம். அவ்வாறு ஒரு நாள் செல்லும் போது, அரக்கன் ஒருவன் அந்த பெண்ணை விரட்டினான். பயந்து ஒட்டம் பிடித்த அந்த பெண் இறைவனிடம் உதவி கேட்டார். அப்போது அங்குள்ள வாகை மரம் இரண்டாக பிளந்து அந்த மரத்திற்குள் அந்த பெண் ஐக்கியமானார் என்பது இந்த கிராம மக்களின் நம்பிக்கையாக உள்ளது. சுயம்புவாக தோன்றிய கூத்தனாட்சி அம்மனை இப்பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர். காவல் தெய்வமாக உள்ள இந்த அம்மன் கோயிலை தேனி எம்.பி. தங்க தமிழ் செல்வன், உபயதாரர்கள் இணைந்து ரூ.50 லட்சத்தில் திருப்பணி செய்தனர். நேற்று முன் தினம் மாலை வாஸ்து பூஜை, கணபதி, நவக்கிரக பூஜை மற்றும் ஹோமங்களுடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் துவங்கியது. நேற்று அதிகாலை கோ பூஜை, கன்னிமார் பூஜை, கணபதி ஹோமம், வேதபாராயணம் நடந்தது. தொடர்ந்து காலை 10:30 மணிக்கு கலங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

மலையடிவாரத்தில் உள்ள புராதனமான இந்த கோயிலிற்கு முதன் முதலாக திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்திய எம்.பி. தங்க தமிழ்செல்வனை இப்பகுதி மக்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !