ஸ்ரீமாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் ராக்கியாபாளையத்தில் கோலாகலம்
அவிநாசி: அவிநாசி அடுத்த ராக்கியாபாளையம் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ மாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா, ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘ஓம்சக்தி பராசக்தி’ கோஷம் முழங்க, விமரிசையாக நடந்தது.
நேற்று நான்காம் கால யாக பூஜை நடைபெற்றது. தொடர்ந்து காலை 8:06 மணிக்கு ஸ்ரீ விநாயகர் கோவில் கோபுர கலசத்துக்கும், 8:36 மணிக்கு ஸ்ரீ மாரியம்மன் கோவில் கோபுர கலசங்களுக்கும் சிவாச்சார்யார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.
முன்னதாக, கடந்த 26ம் தேதி அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து 200-க்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்தக் குடம் ஏந்தி ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து, 28-ம் தேதி ராக்கியாபாளையம் வடக்கு காமாட்சி அம்மன் கோவிலில் இருந்து 1,008 பெண்கள் முளைப்பாரி ஏந்தியும், மேற்கு காமாட்சி அம்மன் கோவிலில் இருந்து ஸ்ரீ மாரியம்மனுக்கு பட்டுப்புடவைகள் எடுத்தும் ஊர்வலமாக சென்றனர்.
மஹா கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து, ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. கோவில் திருப்பணி குழுவினர் மற்றும் ராக்கியாபாளையம் பொதுமக்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.