காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 10 கோவில்களில் கும்பாபிஷேகம் விமரிசை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அம்மன், அனுமன், ஈஸ்வரர் கோவில்களில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நேற்று நடைபெற்றது.
காஞ்சிபுரம் அடுத்த முத்தியால்பேட்டையில் உள்ள பிரசன்ன ஆஞ்சநேயர் கோவிலில், கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த 27ம் தேதி மாலை 5:00 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்கியது.
நேற்று காலை 5:30 மணிக்கு யாகசாலையில் இருந்து மஹா கும்பங்கள் புறப்பாடும், தொடர்ந்து கோவில் கோபுரத்திற்கும், மூலவருக்கும் வேதவிற்பன்னர்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர்.
l சேந்தமங்கலம் கிராமத்தில், ஆதி கனக துர்க்கை அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா ஆக., 28ம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது.
அதே தினத்தில், சிலைகளுக்கு கரிக்கோலம் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று முன்தினம் புதிய சிலைகளுக்கு அஷ்டபந்தனம் செய்யப்பட்டது.
நேற்று காலை 9:15 மணிக்கு ராஜகோபுரம் மற்றும் மூலவர் விமானத்திற்கு, புனித நீரை ஊற்றி, மஹா கும்பாபிஷேகம் நடத்தினர்.
l உத்திரமேரூர் அருகே, பெருநகர் கிராமத்தில், அங்காளம்மன் கோவிலில் கும்பாபிஷேகத்தையொட்டி, நேற்று காலை 9:00 மணிக்கு அங்காளம்மன் கோவில் யாகசாலையில் இருந்து கலசம் புறப்படுதல், காலை 9:30 மணிக்கு கோவில் கோபுர விமான கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி, மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
காலை 9:45 மணிக்கு அங்காளம்மனுக்கு மஹா அபிஷேகம் நடைபெற்றது. மாலை 6:00 மணிக்கு அங்காளம்மன் வீதியுலா வந்தார்.
l வாலாஜாபாத் வல்லப்பாக்கத்தில், கி.பி., 12ம் நுாற்றாண்டைச் சார்ந்த வடிவாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவிலில் அகத்தீஸ்வரர், வடிவாம்பிகை மற்றும் விநாயகர், முருகர், கரி ய மாணிக்க பெருமாள், நடராஜர் சிவகாம சுந்தரி ஆகிய சன்னிதிகளில் பாலாலயம் செய்யப்பட்டு, சில மாதங்களாக புனரமைப்பு பணி நடந்து வந்தது.
நேற்று மஹா கும்பாபிஷேகம் விழாவையொட்டி, கடந்த 28ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வரா உள்ளிட்ட பூஜைகள், நேற்று முன்தினம் பரிவார மூர்த்திகள், மூலவர் சுவாமிக்கு அஷ்டபந்தனம் சாத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றன.
நேற்று காலை 7:30 மணிக்கு, யாகசாலையில் இருந்து கலசம் புறப்பட்டு 8:00 மணிக்கு அனைத்து கோபுர கலசங்களுக்கும் புனிதநீர் ஊற்றி, மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
l ஸ்ரீபெரும்புதுார் அருகே, கீரநல்லுார் கிராமத்தில் பழண்டியம்மன் கோவிலில், 2013ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. இக்கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் விழா நடத்திட, பக்தர்கள் முடிவெடுத்தனர்.
அதன்படி, 15 லட்சம் ரூபாய் செலவில், கோவில் விமானம் பழுது பார்த்தல், வண்ணம் தீட்டுதல், மகா மண்டபத்தில் கருங்கல் தரைதளம் அமைத்தல், பிரகார தரைதளம் பழுதுபார்த்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவு செய்யப்பட்டன. இதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை, கும்பாபிஷேக விழா தொடங்கியது.
நேற்று காலை 9:45 மணிக்கு, கோபுர விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு, மஹா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
l உத்திரமேரூர் அருகே ஆண்டித்தாங்கல் கிராமத்தில், அலைமோதியம்மன், செங்கழுநீர் விநாயகர், மாரியம்மன் கோவில்களில், கடந்த 28ல் கும்பாபிஷேக விழா தொடங்கியது.
நேற்று, காலை 9:30 மணிக்கு யாகசாலையில் இருந்து கலசம் புறப்பட்டு காலை 10:00 மணிக்கு செங்கழுநீர் விநாயகர், மாரியம்மன் கோவிலில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
அதை தொடர்ந்து, காலை 10:20 மணிக்கு அலைமோதியம்மனுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
இரவு 7:00 மணிக்கு அலைமோதியம்மன், செங்கழுநீர் விநாயகர், மாரியம்மன் ஆகிய சுவாமிகள் வீதியுலா வந்தனர். இதில், சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.