மழை வேண்டி முளைப்பாரியுடன் பெண்கள் கஞ்சி கலய ஊர்வலம்
குன்னுார்: நீலகிரியில் வறட்சியின் பிடி நீங்கி மழை பெய்து விவசாயம் செழிக்கவும்; இயற்கை பேரிடர் ஏற்படாமல் இருக்கவும், குன்னுாரில் சிறப்பு பூஜைகளுடன் கஞ்சி கலய ஊர்வலம் நடந்தது.
குன்னுார் ரேலி காம்பவுண்ட் பகுதியில் உள்ள ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம் சார்பில், கஞ்சி கலய ஊர்வலம் நடந்தது. குன்னுார் தந்தி மாரியம்மன் கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க புறப்பட்ட இந்த ஊர்வலம் பஸ் நி லையம் வழியாக ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தை அடைந்தது. வறட்சியின் பிடி நீங்கி மழை பெய்து விவசாயம் செழிக்கவும், நீலகிரியில் இயற்கை பேரிடர் ஏற்படாமல் இருக்கவும் வேண்டி, நவதானியங்களை விதைத்து, ஒன்பது நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் முளைப்பாரியை ஏந்தியும், தலையில் கஞ்சி கலயத்தை சுமந்தும் ஊர்வலமாக வந்தனர். அங்கு சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் கன்டோன்மென்ட் வாரிய முன்னாள் துணை தலைவர் வினோத் குமார், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சீனிவாசன், பா.ஜ., நிர்வாகிகள் குங்குமராஜ், பாலாஜி, அ.தி.மு.க., நகர செயலாளர் சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை மன்ற தலைவி பிரபாவதி மோகன் தலைமையில், மன்ற குழுவினர் செய்திருந்தனர்.