நெய்வேலி அங்காளம்மன் கோவிலை கையகப்படுத்தியது அறநிலையத்துறை
நெய்வேலி: நெய்வேலி அடுத்துள்ள தெற்கு மேலுாரில் உள்ள அங்காளம்மன் கோவிலை தமிழக அரசின் அறநிலையத்துறை கையகப்படுத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல் .சி., முதல் சுரங்கம் 1 ஏ அருகில் தனியார் கட்டுப்பாட்டில் பிரசித்தி பெற்ற தெற்கு மேலூர் ஸ்ரீ அங்காளம்மன் கோவில் உள்ளது. 300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட இக்கோவில், நெய்வேலியை சுற்றியுள்ள 37 கிராம மக்களுக்கு குலதெய்வ கோவிலாக உள்ளது. தற்போது இக்கோவில், தனியார் கட்டுப்பாட்டில் உள்ளது. அதன் தர்மகர்த்தாவாக தொழிலதிபர் துரைராஜ் உள்ளார். இந்நிலையில் அரசின் உத்தரவின்பேரில், இக்கோவிலை இந்து அறநிலையத்துறை நேற்று மதியம் கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டது. அப்போது பக்தர்கள் சிலர் அறநிலையத்துறையின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர், அறநிலையத்துறை இன்ஸ்பெக்டர் வசந்தம் தலைமையிலான 10 பேர் கொண்ட குழுவினர். கோவிலின் சொத்து மற்றும் கோவில் தொடர்பான பல்வேறு ஆவணங்களை ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து, கோவில் தர்மகர்த்தா துரைராஜ்யிடம் இருந்து கோவில் நி ர்வாகம் சம்பந்தமான அனைத்து விதமான பொறுப்புகளும் அறநிலையத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. கோவிலில் உள்ள பூஜை பொருட்களுக்கு கணக்குப்பிள்ளை கலியபெருமாள், பூசாரிகள் மணிகண்டன், ராமச்சந்திரன், குமரன், சக்திவேல், சதீஷ் ஆகியோர் பொறுப்பு என அவர்களிடம் கையெழுத்து பெறப்பட்டது.