திருப்புல்லாணி புல்லாணியம்மன் கோயிலில் அனுமதி பெறும் பூஜை
திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே உள்ள புல்லாணி அம்மன் கோயிலில் சுற்றுவட்டார 52 கிராமங்களைச் சேர்ந்த அம்மன் கோயில்களில் முளைப்பாரி விழா சமயங்களில் அனுமதி பெறும் பூஜை இங்கு நடந்து வருகிறது.
ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு சொந்தமான புல்லாணி அம்மன் கோயில் பழமையும் புரதான சிறப்பு பெற்றது. திருப்புல்லாணி சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள முத்து மாரியம்மன் மற்றும் அம்மன் கோயில்களில் முளைக்கொட்டு உற்ஸவங்களை முன்னிட்டு இங்கிருந்து அபிஷேகப் பால் மற்றும் புனித தீர்த்தம் உள்ளிட்டவைகளை பெற்று அங்குள்ள முளைப்பாரிகளின் மீது தெளிக்கப்படுகிறது. இவ்வழக்கம் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. கோயில் பூஜகர் அரியமுத்து கூறியதாவது: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் நடக்கும் பிரம்மோற்ஸவம் மற்றும் சைத்ரோத்ஸவம் உள்ளிட்ட விசேஷ தினங்களில் இங்குள்ள புல்லாணி அம்மன் கோயிலில் அனுக்ஞை எனப்படும் அனுமதி பூஜை மற்றும் காளியாட்ட பூஜை மேற்கொள்ளப்படுகிறது. சுற்றுவட்டார 52 கிராமங்களில் உள்ள அம்மன் கோயில்களில் முளைப்பாரி விழா நேரங்களில் இங்கிருந்து பூஜிக்கப்பட்ட புனித நீர் மற்றும் பால் கொண்டு செல்வது பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. முன்னொரு காலத்தில் சேதுக்கரை செல்வதற்காக வருகை தந்த தமிழ் மாமுனிவர் அகத்தியர் இங்கு தங்கி விட்டு சென்றதாக ஐதீகம் நிலவுவதால், அகத்தியர் பீடமும் இங்கு தனியாக அமைக்கப்பட்டு பூஜிக்கப்படுகிறது என்றார்.