பரமக்குடி தர்மசாஸ்தா கோயிலில் விநாயகருக்கு சங்காபிஷேகம்
பரமக்குடி: பரமக்குடி தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் விநாயகருக்கு சங்காபிஷேகம் நடந்த நிலையில், ஐயப்பனுக்கு புதிய வெள்ளிக் கவசம் சாற்றி வழிபாடு நடத்தப்பட்டது.
பரமக்குடி தரைப்பாலம் அருகில் தர்மசாஸ்தா ஐயப்பன் கோயில் உள்ளது. இங்கு சங்கடஹர சதுர்த்தி விழாவையொட்டி விநாயகருக்கு 108 சங்காபிஷேகம் நடந்தது. முன்னதாக மூலவர் ஐயப்பனுக்கு சாற்றுவதற்காக புதிய வெள்ளிக் கவசம் முக்கிய வீதிகள் வழியாக வெள்ளோட்டம் நடந்தது. தொடர்ந்து ஹோமம் நடந்து பூர்ணாகுதி நிறைவடைந்து விநாயகர் மற்றும் ஐயப்பனுக்கு பல்வேறு திரவியங்கள் பால், பன்னீர் அபிஷேகம் நடந்தது. பின்னர் இரவு 10:00 மணிக்கு நுாதன வெள்ளிக் கவசம் ஐயப்பனுக்கு சாற்றப்பட்டது. துாப தீப ஆரத்திகள் முதலான ஷோடோபசாரம் நிகழ்த்தப்பட்டது. பிரசாதங்கள், அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். உபயதாரர்கள், தர்மசாஸ்தா சேவா சங்க நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்தனர்.