இரண்டு தலைமுறையாக பக்தர்களுக்கு வேல் குத்தும் ஆன்மிகவாதி
திருவாடானை: திருவிழாக்களில் நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்களுக்கு 2 தலைமுறையாக வேல் குத்தி ஆன்மிகத்தில் புனிதமான நிகழ்வை ஆன்மிகவாதி நடத்தி வருகிறார்.
தமிழ் வழிபாட்டு முறைகளில் வேல் குத்துதல் (அலகு குத்துதல்) மிக முக்கியமாக கருதப்படுகிறது. முருகன் மற்றும் அம்மன் கோயில் திருவிழாக்களில் நிறைவேற்றப்படும் ஒரு முக்கியமான நேர்த்திக் கடனாகும். வேல் குத்துவது பக்தரின் ஆழ்ந்த நம்பிக்கையையும், உடல் வலியை தாண்டி இறை சிந்தனையில் இருக்கும் உன்னத நிலையை காட்டுகிறது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே பொன்னக்கரை கிராமத்தை சேர்ந்தவர் மச்சக்காளை 55. இவர் திருவிழாக்களில் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்களுக்கு நீண்ட வேலை கண்ணத்திலும் நாக்கிலும் குத்தும் சேவையை 2 தலைமுறைகளாக செய்து வருகிறார். கிராம கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களின் போது இவரை தேடி அழைத்து வந்து வேல் குத்திக் கொள்வது வழக்கமாக உள்ளது. இது குறித்து மச்சக்காளை கூறியதாவது:
எங்கள் குடும்பத்தில் எனது தந்தை காலத்தில் இருந்து இந்த ஆன்மிக பணியை செய்து வருகிறோம். இப்போது 2 வது தலைமுறையாக நான் பக்தர்களுக்கு வேல் குத்துகிறேன். நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்களுக்கு சாதரணமாக உடனடியாக வேல் குத்தி விட முடியாது. அதற்குரிய பூஜை முறைகள் உள்ளன. முதலில் சிறப்பு பூஜை செய்து மேளதாளங்கள் முழங்க சுவாமியை வரவழைப்போம்.
அப்போது கருடபகவான் வானில் வட்டமிடுவார். கருட பகவான் ஆகாயத்தில் வட்டமிடுவதை கண்டதுமே பக்தர்களுக்கு தானாக சாமி வந்து ஆடுவார்கள். பக்தர்கள் தங்களை முற்றிலும் மறந்து முழு சிந்தனையையும் இறைவனிடம் மட்டுமே செலுத்துவார்கள். அவர்கள் மெய் மறந்து நிற்கும் அந்த புனிதமான தருணத்தில் நான் இறைவனை மனதார வேண்டி வேல் குத்துவேன்.
ஒரு கோயில் கும்பாபிேஷகம் நடைபெறும் போது புனித தன்மை எப்படி பின்பற்றப்படுகிறதோ, அதே அளவிலான பக்தி சத்தத்தோடு இந்த வேல் குத்தும் நிகழ்ச்சி நடக்கும். அவர்களுக்கு எந்தவித வலியோ, ரத்தப்போக்கோ, பக்க விளைவுகளோ ஏற்படுவதில்லை. ஆன்மிக மனநிறைவோடு இப்பணியை செய்கிறேன் என்றார்.