உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ‘நால்வரின் திருவாக்குகளே நமக்கு ஆதாரம்’; சொற்பொழிவாளர் மதுசூதன

‘நால்வரின் திருவாக்குகளே நமக்கு ஆதாரம்’; சொற்பொழிவாளர் மதுசூதன

சென்னை: ‘‘சைவ சமயத்தில் திருஞான சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரின் திருவாக்குகளையே நாம் ஆதாரமாக கொள்ள வேண்டும். பல்வேறு சிக்கல்கள், சந்தேகங்கள் வந்தாலும், இதுதான் நிலையானது,’’ என, சமய சொற்பொழிவாளர் மதுசூதனன் கலைச்செல்வன் தெரிவித்தார்.


ஆதாரம் ஆராய்ச்சி மற்றும் நலவாழ்வு நிறுவனம் சார்பில், ‘சுப்பு -– 75’ விருது வழங்கும் விழா மற்றும் மா.சாம்பசிவம் பிள்ளையின் ‘திருநான்மறை விளக்க ஆராய்ச்சி’ நுால் குறித்த மீள்பார்வை, சென்னை மயிலாப்பூர், ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் நேற்று நடந்தது. ‘லெய்டன்’ செப்பேடுகளை இந்தியா கொண்டுவருவதில் சிறப்பாக பணியாற்றியமைக்காக, வழக்கறிஞர் ஜகன்நாத்துக்கு, ‘சுப்பு – 75’ விருதை, ‘தினமலர்’ நாளிதழின் இணை ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி வழங்கினார்.


விழாவில், முனைவர் மதுசூதனன் கலைச்செல்வன் பேசியதாவது: ‘மூவா நான்மறை’ என்ற திருவாசக சொற்களுக்கு, மறைமலை அடிகள் சொன்ன பொருள் சர்ச்சைக்கு உரியதாக மாறியது. அதன் தொடர்ச்சியாக, ‘செந்தமிழ் செல்வி’ இதழில் திருநான்மறை விளக்கம் எனும் தலைப்பில், கா.சு.பிள்ளை ஒரு தொடர் எழுதினார். நான்கு வேதங்கள் தமிழிலேயே இருந்தன. அவை குமரி கண்ட அழிவில் அழிந்து விட்டன’ என்பதுதான் அத்தொடரின் சாராம்சம்.


இதை மறுத்து, திருச்சி மா.சாம்பசிவம் பிள்ளை ‘திருநான்மறை விளக்க ஆராய்ச்சி’ என்ற தலைப்பில் நுால் எழுதினார். ‘பஞ்சாட்சரம்’ தமிழா அல்லது வடமொழியா என்பது குறித்து பெரிய தர்க்கமே இந்நுாலில் நடக்கிறது. மறைமலை அடிகளாரும், கா.சு.பிள்ளையும் மெத்த படித்தவர்கள். ஆனால், அவர்கள் அன்றைய காலத்தில் முன் வைத்த வாதங்கள் இன்று எடுபடவில்லை. அதேநேரம் இந்த பிரச்னை, சம்பந்தர் காலம் தொடங்கி, தமிழகத்தில் இப்போது வரை இருந்து வருகிறது. சைவ சமயத்தை பொறுத்தவரை திருஞான சம்பந்தர், அப்பர், சுந்தரர் மற்றும் மாணிக்கவாசகர் ஆகிய நால்வரின் திருவாக்குகளையே நாம் ஆதாரமாக கொள்ள வேண்டும். பல்வேறு சிக்கல்கள், சந்தேகங்கள் வந்தாலும், அவைதான் நிலையானவை. இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து, ‘கலைமகள்’ இதழ் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் பேசுகையில், ‘‘எழுத்தாளர் சுப்பு அனைத்தையும் ஆதாரங்களுடன் பார்ப்பவர். அவருக்கு அனைத்து கட்சிகளிலும் நண்பர்கள் உள்ளனர். தமிழகத்தில் பிரச்னை செய்வதற்கென்றே, 80 ஆண்டுகளாக ஒரு கூட்டம் இயங்கி வருகிறது. அவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுக்க, சுப்பு போன்றோர் தொடர்ந்து இயங்கி வருகின்றனர்,’’ என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !