உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவிலுக்குள் கர்ப்பிணிகள், முதியோர்களுக்கு மொபைல் போனுக்கு தடையில்லை: அமைச்சர் ரமேஷ்

கோவிலுக்குள் கர்ப்பிணிகள், முதியோர்களுக்கு மொபைல் போனுக்கு தடையில்லை: அமைச்சர் ரமேஷ்

சென்னை: கர்ப்பிணிகள், கை குழந்தை வைத்திருப்போர், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் வரும் போது மொபைல் போன் வாங்கி வைப்பது அவசியம் கிடையாது என அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அமைச்சர் ரமேஷ் கூறியதாவது: கோவிலுக்குள் செல்போன் தடை புதிய நடைமுறை எல்லாம் கிடையாது; 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் மதுரை ஐகோர்ட் கிளையில் ஒரு தீர்ப்பு அளிக்கப் பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் செல்போன் தடையை நடைமுறைப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அப்போது இருந்து நிறைய கோவில்களில் நடைமுறைப் படுத்தும் பணி துவங்கியது. மதுரை மீனாட்டசி அம்மன் கோவில், திருச்செந்தூர், பழநி, ராமேஸ்வரத்தில் மொபைல் போன் பாதுகாப்பு இடம் அமைத்து ரூ.5 வசூல் செய்வது வந்துவிட்டது. 


மக்களை கஷ்டப்படுத்த வேண்டும் என்று எந்தவொரு விஷயத்தையும் நாங்கள் செய்யவில்லை. மிக தெளிவாக எல்லா கோவில்களுக்கும் அறிவுறுத்தி இருக்கிறோம். எந்தவொரு இடத்திலும் மக்கள் நீண்டநேரம் வரிசையில் நிற்கும் சூழல் உருவாகி விட கூடாது என்று சொல்லி இருக்கிறோம். மொபைல் போன் வைப்பதே மிகப்பெரிய பாரமாக மாறி விடக்கூடாது. இதை எல்லாம் பார்த்து விட்டு அதற்கு ஏற்ப முடிவுகள் செய்யுமாறு கோவில்களை அறிவுறுத்தி இருக்கிறோம். 


கர்ப்பிணிகள், கை குழந்தை வைத்திருப்போர், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் வரும் போது மொபைல் போன் வாங்கி வைப்பது அவசியம் கிடையாது. கேமரா இல்லாத சாதாரண மொபைல்போன்களுக்கு தடை இல்லை. ஊழியர்களின் சம்பளம் உள்ளிட்ட செலவினங்களுக்காகவே கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. கோவில்களில் செல்போன்களை பாதுகாப்பாக வைப்பதற்கு ரூ.5 கட்டணம் வசூலிப்பது குறித்து தவறான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.  அந்த ரூ.5 மூலம் கிடைக்கும் வருவாய் கோவில் பணியாளர்களின் சம்பளம் உள்ளிட்ட பராமரிப்பு செலவுகளுக்கும், கோவில்களுக்கு வருகை தரும் ஏழை, எளிய மக்களின் அன்னதான திட்டத்திற்கும் முழுமையாக பயன்படுத்தப்பட உள்ளது. கோவிலில் கொள்ளையடிப்பது போல் பேசுவதா? கண்மூடித்தனமாக எதிர்க்கக் கூடாது. நாங்கள் மக்களுக்கான அரசு. கோவில் அரசியல் செய்வதற்கான இடம் அல்ல; உண்மையில் பக்தர்களுக்கு சிரமம் இருந்தால் நிச்சயமாக நாங்கள் மாற்று ஏற்பாடு செய்வோம். இவ்வாறு அமைச்சர் ரமேஷ் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !