உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
ஆர்.எஸ்.மங்கலம்: உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில், சதுர்த்தி விழா கொடியேற்ற நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே, உப்பூரில் பிரசித்தி பெற்ற விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் மூலவர் மீது பகல் முழுவதும் சூரிய ஒளி படும் வகையில் கருவறை அமைய பெற்றுள்ளதால், இந்த விநாயகர் வெயிலுகந்த விநாயகர் என அழைக்கப்படுகிறார். ஆண்டு தோறும் இக்கோயிலில் சதுர்த்தி விழா 10 நாட்கள் நடக்கிறது. இந்த நிலையில், இன்று காலை 8:35 மணிக்கு கோயில் கொடி மரத்தில் விழா கொடியேற்றப்பட்டு, இக்கோயில் சதுர்த்தி விழா துவங்கியது. தொடர்ந்து தினமும் மாலையில் வெள்ளி மூஷிகம், சிம்மம், மயில், யானை, ரிஷபம், காமதேனு, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் விநாயகர் ஊர்வலம் நடக்கிறது. விழாவின் எட்டாம் நாளான செப்.12 ல், சித்தி, புத்தி ஆகிய இரு தேவியருடன் விநாயகருக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. வட மாநிலங்களில் மட்டுமே விநாயகருக்கு திருக்கல்யாணம் நடைபெறும் நிலையில், இந்த விநாயகருக்கு திருக்கல்யாணம் நடைபெறுவது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். தொடர்ந்து மறுநாள் தேரோட்டம் நடைபெற்று, செப். 14 ல் நடைபெறும் சதுர்த்தி தீர்த்தவாரியுடன் விழா நிறைவடைகிறது.