தட்டாஞ்சாவடி காளியம்மன் கோவிலில் தேரோட்டம்; பக்தர்கள் தரிசனம்
பண்ருட்டி: தட்டாஞ்சாவடி காளியம்மன் கோவில் செடல் மற்றும் தேர் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பண்ருட்டி அடுத்த தட்டாஞ்சாவடி காளியம்மன் கோவில் 66 ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மறுநாள் சாகை வார்த்தல் மற்றும் திருவிளக்கு பூஜை நடந்தது. கடந்த 2ம் தேதி காலை பால்குட ஊர்வலம், மாலை பூப் பல்லக்கில் அம்மன் வீதியுலாவும், நேற்று முன்தினம் மாலை மகிஷாசூர சம்ஹாரம் மற்றும் அம்மன் வீதியுலா நடந்தது. நேற்று காலை கெடிலம் ஆற்றில் இருந்து கரகம் வீதியுலாவும், மதியம் செடல் உற்சவம் நடந்தது. மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடந்தது. செடல் உற்சவத்தையொட்டி, பக்தர்கள் அலகு குத்தியும், செடல் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் நகராட்சி சேர்மன் ராஜேந்திரன், கவுன்சிலர்கள் கிருஷ்ணராஜ், சண்முகவள்ளி பழனி, தொழிலதிபர்கள் அருள், சரவணன், தேவராஜ், ராஜ்மோகன், ஆடிட்டர் தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.