ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் கோயிலில் பூக்குழி விழா
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் பூக்குழி விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் கோயில் விழா, ஆக.14 ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் பல்வேறு கிராமத்தார்களின் மண்டகப்படி நிகழ்வுகளாக, சக்தி கரகம், தர்மர் பிறப்பு, கிருஷ்ணர் பிறப்பு, திரவுபதி திருக்கல்யாணம், சக்ரா பர்ணகோட்டை, அபிமன்யு பிறப்பு, தவசு -கடப்பலி, படுகளம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்று, இன்று காலை 5:55 மணிக்கு பூக்குழி விழா நடைபெற்றது. முன்னதாக, விரதம் இருந்த பக்தர்கள், அரசூரணி குளக்கரையில் புனித நீராடி, அங்கிருந்து ஊர்வலமாக சென்று கோயில் முன்பு தீ மிதித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். பின்னர், மூலவருக்கு நடைபெற்ற சிறப்பு தீப ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 25 நாட்கள் நடைபெறும் விழாவின் தொடர்ச்சியாக, நாளை செப்.6 ல் மஞ்சள் நீராடுதல் விழா நடைபெற்று, செப்.8 ல் நடைபெறும் பட்டாபிஷேக விழாவுடன் இக்கோயில் விழா நிறைவடைகிறது.