உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறுமியின் கனவில் தோன்றிய முருகப் பெருமானுக்கு கோவில் கட்டும் பணி தொடக்கம்

சிறுமியின் கனவில் தோன்றிய முருகப் பெருமானுக்கு கோவில் கட்டும் பணி தொடக்கம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா கொள்ளிடம் அருகே பாவட்டமேடு கிராமத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக கீற்று கொட்டகை ஒன்றில் முருகப்பெருமானை வைத்து அப்பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கிராமத்தைச் சேர்ந்த 7 வயது வசந்தி என்ற சிறுமியின் கனவில் முருகப்பெருமான் குழந்தை வடிவாக தோன்றி எனக்கு கோவில் கட்டினால் அனைவருக்கும் நல்லது நடக்கும் என்று கூறி மறைந்ததாக கூறப்படுகிறது. இதனை அந்த சிறுமி பெற்றோர் மற்றும் கிராம மக்களிடம் தெரிவித்துள்ளார். அதனை கேட்ட கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி முருகப் பெருமானுக்கு பெரிதாக கோவில் கட்ட முடிவு செய்தனர். தொடர்ந்து முத்துக்குமாரசாமி என்ற திருநாமத்தில் முருகனுக்கு கோவில் கட்டும் பணி இன்று தொடங்கியது கிராம மக்கள் ஒன்று கூடி கோவில் கட்டுமான பணியை தொடங்கி வைத்தனர். சிறுமியின் கனவில் முருகன் தோன்றியதால் கிராம மக்கள் சார்பில் கோவில் கட்டும் பணி தொடங்கியுள்ள செய்தி மாவட்ட முழுவதும் வைரலாக பரவி வருகிறது. இதனை அறிந்த அருகில் உள்ள கிராம மக்கள் பாவட்டமேடு கிராமத்திற்கு சென்று கோவில் கட்டும் பணியை பார்த்து முருகனை தரிசித்துச் செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !