ஸ்ரீவேணுகோபால கிருஷ்ண சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
திருப்பூர்: கள்ளப்பாளையம் ஸ்ரீருக்மணி, சத்யபாமா சமேத வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
பல்லடம் தாலுகா, சாமளாபுரம் கிராமம், கள்ளப்பாளையத்தில் உள்ள ஸ்ரீருக்மணி, சத்யபாமா சமேத வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோவில் கும்பாபிஷேக விழா பட்டாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க விமரிசையாக நடைபெற்றது. கடந்த 31-ம் தேதி சங்கல்பத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து கடந்த 5-ம் தேதி மங்கள இசையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின.
விஷ்வக்சேன ஆராதனம், சாந்தி ஹோமம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. மாலையில் மூலமந்திர மூர்த்தி மந்திர ஹோமங்களும் நடைபெற்றன. நேற்று முன்தினம் மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 17 கலச ஸ்தாபன திருமஞ்சனம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கால வேள்வி பூஜைகள் நடைபெற்றன. நேற்று அதிகாலை 6:00 மணிக்கு நான்காம் கால சிறப்பு யாகசாலை பூஜைகள் தொடங்கின. யாகசாலை பூஜைகள் நிறைவடைந்ததும், புனித தீர்த்தம் நிரப்பப்பட்ட கலசங்கள் மங்கள இசையுடன் புறப்பாடாகின.
காலை 9:05 மணி முதல் 10:05 மணிக்குள் ஸ்ரீருக்மணி, சத்யபாமா சமேத வேணுகோபால கிருஷ்ணசுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து உபசார பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. விழாவை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
கும்பாபிேஷக மற்றும் யாகசாலை பூஜைகளை அவிநாசி முரளி பட்டாச்சார்யார் தலைமையில், பட்டாச்சார்யார்கள் மேற்கொண்டனர்.
கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை கள்ளப்பாளையம் ஊர்பொதுமக்கள் மற்றும் திருப்பணிக் குழுவினர் செய்திருந்தனர். இன்று முதல் தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெற உள்ளன.