ராமநாதபுரம்: சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை, பரமக்குடி, எமனேஸ்வரம் பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ விழா நடந்தது.
நேற்று எமனேஸ்வரம் எமனேஸ்வரமுடையவர் கோயிலில் நடந்த பிரதோஷ விழாவில் நந்தி பகவானுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்யப்பட்டது. செவ்வாய்க்கிழமை பிரதோஷ வழிபாட்டில் சிவனை தரிசிப்பதால் கடன் தொல்லைகள் நீங்கி வளம் பெருகும் என்ற நம்பிக்கை உள்ளது.
இதன்படி மாலை 4:30 மணி துவங்கி 6:00 மணி வரை அபிஷேகம், தீபாராதனைகள் வழிபாடு நடந்தது. கோயிலில் எமனேஸ்வரமுடையவர், சொர்ணகுஜாம்பிகை உடன் ரிஷப வாகனத்தில் உலா வந்தார்.
எமன் தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க, இழந்த ஆயுள் மற்றும் பதவிகளை மீண்டும் பெற இக்கோயிலில் தரிசனம் செய்ததாக தல வரலாறு கூறுகிறது. வில்வமரம் தல விருட்சமாக உள்ளது.
தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதே போல் ஈஸ்வரன் கோயில், மீனாட்சி சுந்தரேஸ்வரர், நயினார்கோவில் நாகநாதசுவாமி ஆகிய அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
*திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள் உடனுறை வல்மீகநாதர், தொண்டி சிதம்பரேஸ்வரர், நம்புதாளை நம்பு ஈஸ்வரர், திருத்தேர்வளை ஆண்டுகொண்டேஸ்வரர் மற்றும் கிராமங்களில் உள்ள சிவன் கோயில்களில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது.
சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க திரவியங்களால் அபிேஷகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.