காரமடை அரங்கநாதர் கோவிலில் புரட்டாசி முதல் சனி சிறப்பு வழிபாடு
கோவை; காரமடை அரங்கநாதர் சுவாமி கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை வைபவத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ரங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம் காரமடை அரங்கநாதர் கோவில். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி சனிக்கிழமை விழாவும், நவராத்திரி விழாவும் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு புரட்டாசி முதல் சனிக்கிழமை விழா, இன்று 19ம் தேதி காலை துவங்கியது. அதிகாலை மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பால் தயிர் இளநீர் மஞ்சள் சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் மகா அபிஷேகம் முடிந்து ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி சப்பரத்தில் வெண்பட்டு குடை சூழ திருக்கோவில் வலம் வந்து கல்யாண மண்டபம் அடைந்து சேவை சாதித்தார். இரவு 8 மணிக்கு ஆஸ்தான ம் அடைவார்.
26ம் தேதி இரண்டாவது சனிக்கிழமை விழாவும், அக்., 3ம் தேதி மூன்றாவது சனிக்கிழமை விழாவும் நடைபெற உள்ளது. 10ம் தேதி நான்காம் சனிக்கிழமை விழாவும், மஹாளய அமாவாசை விழாவும் நடைபெற உள்ளது. அக்.,12ம் தேதி நவராத்திரி உற்சவம் விழா துவங்க உள்ளது. 17ம் தேதி ஐந்தாவது சனிக்கிழமை விழா நடைபெற உள்ளது. அக்.,20ம் தேதி சரஸ்வதி பூஜையும், 21ம் தேதி விஜயதசமியும், குதிரை வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி, அம்பு போடும் விழாவும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர், பணியாளர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.