புரட்டாசி பிரம்மோற்சவம்; திருத்தேரில் வலம் வந்த ஸ்ரீநிவாச வரதராஜ பெருமாள்
ADDED :1 days ago
சுண்டபாளையம்: சுண்டபாளையத்தில் உள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாச வரதராஜ பெருமாள் கோயிலில், ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவம் நடைபெறும். இந்தாண்டு பிரம்மோற்சவ விழா 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவின் ஏழாம் நாளான நேற்று காலை, 8:45 மணிக்கு ரதாரோஹணம் உற்சவம் நடந்தது. காலை 10:00 மணிக்கு, மங்கள வாத்தியங்கள் முழங்க, ஸ்ரீநிவாச வரதராஜ பெருமாள் தேவியாருடன் திருத்தேரில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள், ‘கோவிந்தா, கோவிந்தா’ என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து, நான்கு ரத வீதிகள் வழியாக இழுத்து வந்தனர். மாலையில் தேர் நிலையில் நிறுத்தப்பட்டது. தேர் திருவிழாவையொட்டி, ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.