உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆட்சி மாறினாலும் மாறாத அறநிலையத்துறை! இதைச் செய்யுமா தமிழக அரசு?

ஆட்சி மாறினாலும் மாறாத அறநிலையத்துறை! இதைச் செய்யுமா தமிழக அரசு?

த.வெ.க., ஆட்சிக்கு வந்து, ஜோசப் விஜய் முதல்வர் ஆனார். அர்ச்சகர் குடும்பத்தில் பிறந்து, கோவில் வாழ்வை நேரடியாக அறிந்த இளைஞர் ரமேஷ், ஸ்ரீரங்கம் தொகுதியில் வென்று அறநிலையத்துறை அமைச்சரானார். பக்தர்களுக்கு புதிய நம்பிக்கை பிறந்தது. அந்த நம்பிக்கையுடன்தான், 2026, மே, 26ல் ‘தினமலர்’ நாளிதழில் ‘அறநிலையத்துறையில் மாற்றம் தேவை’ என, 10 கோரிக்கைகளுடன் கட்டுரை எழுதினேன். அதற்கு த.வெ.க., அரசு செவிமடுத்ததா என்பதுதான் கேள்வி. புதிய அரசு மீது விமர்சனம் வைக்கும் முன், இந்த ஆட்சியில் நடந்த சில நல்லவற்றையும் காண்போம்.


கடந்த ஜூன் 19ல், அறநிலை யத்துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டது. தி.மு.க., ஆட்சியில் அனுமதி வழங்கப்பட்டு, கோவில் நிலங்களில், கோவில் பணத்தைக் கொண்டு கட்டப்படவிருந்த 46 வணிகத் திட்டங்களுக்கான நிர்வாக அனுமதி ரத்து செய்யப்பட்டது.


இதில், 29 திருமண மண்டபங்கள் - – 115.77 கோடி ரூபாய், 17 வணிக வளாகங்கள் – 130.1 கோடி ரூபாய் என, மொத்தம் 246 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் அடங்கும். கோவில் நிலம் வணிக வளாகமாக மாறும்போது, அது நிரந்தரமாகக் கோவிலிடமிருந்து விலகிப் போகிறது. இதைத்தடுத்த முதல்வருக்கும், அமைச்சருக்கும் பாராட்டுகள்.


அதேபோன்று, கடந்த ஜூலையில், திருச்செந்துாரில் விரைவு தரிசனத்திற்குப் பணம் வசூலிக்கப்பட்டதை கண்டறிந்த அமைச்சர், அறநிலையத்துறை சார்ந்த முறைகேடுகளை minister_hrce@tn.gov.in என்ற இ–மெயில் முகவரிக்கு அனுப்பினால், நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார்.


இவை இரண்டும், அரசியல் தளத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள். ஆனால், அரசியல் தளத்தில் ஒரு முடிவு எடுக்கப்படுவதற்கும், துறையின் அன்றாட நிர்வாகம் மாறுவதற்கும் இடையே உள்ள துாரம் மிக அதிகம்; அந்தத் துாரத்தைத்தான் இங்கே சுட்டிக்காட்டுகிறேன்.


அறநிலையத்துறையில் வெளிப்படைத் தன்மை, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்குத் தீர்வு, நவீன கணக்கு முறை, ஆண்டாண்டு காலமாகக் குவிந்து கிடக்கும் தணிக்கை ஆட்சேபனைகளுக்குத் தீர்வு, கோவில் நிலங்களின் மீட்பு, கோவில் பணம் கோவிலுக்கே திரும்புதல், வழிபாட்டு விஷயங்களில் துறை தலையிடாமை, தி.மு.க., அரசு கொண்டுவந்த சட்டத் திருத்தங்களைத் திரும்பப் பெறுதல் போன்ற கோரிக்கைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப் படவில்லை.


இவை அனைத்தும் சட்டமும், நீதிமன்றத் தீர்ப்புகளும் ஏற்கனவே வலியுறுத்தியவை.


துறை மாறவில்லை


நான், 2023-ல் தாக்கல் செய்த ரிட் மனுவில் – எண். 35452/2023 – கோரியது மிக எளிமையான ஒன்று. அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் ஆண்டு தணிக்கை அறிக்கைகளை, பசலி 1419 முதல் இன்று வரை, துறையின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யக்கூடிய ‘பிடிஎப்’ வடிவில் வெளியிட வேண்டும்.


எந்த தணிக்கை குற்றச் சாட்டையும் குறையையும் உடனடியாகத் திருத்தச் சொல்லவில்லை; வெறுமனே வெளியிடச் சொன்னேன். இதுதொடர்பான எனது முறையீட்டின் பேரில், கடந்த 2025, ஆக.,21ல், சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் ஆர்.சுரேஷ் குமார், எஸ்.சவுந்தர் அமர்வு, இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.


அதில்...


‘தலைமைத் தணிக்கை இயக்குநர் 21.03.2023 அன்று ஆணையருக்கு எழுதிய கடிதத்தில், மாவட்டங்களில் உள்ள 9,525 கோவில்களில் இதுவரை தணிக்கையே நடத்தப் படவில்லை.


‘ஆணையரே 19.12.2024 அன்று (ந.க. எண். 57960/2023) மூலம், தணிக்கை அறிக்கைகளைப் பசலி வாரியாக ஸ்கேன் செய்து ‘ITMS’ மென்பொருளின் தணிக்கைத் தகவல் தொகுதி வழியாக, 31.01.2025-க்குள் பதிவேற்றம் செய்ய உத்தரவிட்டிருந்தார்.


‘அத்தனை நடந்தும், ஒரு தணிக்கை அறிக்கை கூட எந்த கோவிலின் இணையதளத்திலும், துறையின் இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்படவில்லை. பல கோவில்களில் கணக்குகளே தணிக்கைக்குச் சமர்ப்பிக்கப்படவில்லை. இந்த குறைபாடுகள் ஆணையரின் சரியான மேற்பார்வையால் திருத்தப்பட வேண்டும்’ என, உத்தரவிடப்பட்டிருந்தது.


‘மேலும், மாநிலம் முழுதும் உள்ள சுமார் 50 முக்கியக் கோவில்களின் தணிக்கை அறிக்கைகளை உடனடியாக பதிவிறக்கம் செய்யக்கூடிய ‘பிடிஎப்’ வடிவில் பதிவேற்றம் செய்ய ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனவும் கூறப்பட்டிருந்தது.


அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஓராண்டாகிவிட்டது. இதுதொடர்பாக, ஆணையரின் சுற்றறிக்கை (31.01.2025) பிறப்பிக்கப்பட்டு 20 மாதங்கள் ஓடிவிட்டன. புதிய அரசு பொறுப்பேற்று நான்கு மாதங்கள் ஆகிவிட்டது.


இன்றுவரை தணிக்கை அறிக்கைகள் இணையத்தில் வெளியிடப்படவில்லை. ஏற்கனவே இருக்கும் ஆவணத்தைப் இணையத்தில் பதிவேற்றுவது, குமாஸ்தா வேலை. ஆனால், அதைக்கூட செய்யவில்லை.


ஐகோர்ட் உத்தரவிட்டும் அமல்படுத்த மறுக்கும் ஒரு துறை, தானாக முன்வந்து கோவில் நிலங்களை மீட்கும் என்றோ, குறைபாடுகளை சரி செய்யும் என்றோ, ஆக்கிரமிப்பாளர்களிடம் இழப்பை வசூலிக்கும் என்றோ எதிர்பார்ப்பது வீண் அன்றி வேறில்லை.


கரூரில் 3,085 ஏக்கர் 


கடந்த ஜூலை, 9ல், அறநிலையத்துறை ஆணையர் வினய் கடிதம் (ந.க. எண். 2920545/2026/எம்2) மூலம், கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு கோவில்களுக்குச் சொந்தமான சுமார் 3,085 ஏக்கர் நிலங்களின் மீது இருந்த பத்திரப் பதிவுத் தடை நீக்கப்பட்டது; அந்த சொத்துக்களின் மதிப்பு பல்லாயிரம் கோடி ரூபாய்.


இந்தத் தவறை, ஓட்டுக் காகக் கூட செய்ய மறுத்தது முந்தைய தி.மு.க., அரசு. ஆனால், த.வெ.க.,அரசு செய்தது. தடை நீக்க உத்தரவால் பயனடைவோர் 3,360 தனியார் பட்டாதாரர்கள்.


கோவில் நிலங்களின் மீதான பத்திரப் பதிவுத் தடை என்பது, ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து கோவிலைக் காக்கும் கடைசி அரண். அந்த அரணையும் ஒரே ஒரு வெற்றுக் கடிதத்தால், தானே தகர்த்தெறிந்துவிட்டது த.வெ.க., அரசு.


கடந்த 2021, ஜூன் 7ல், ஐகோர்ட் நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வு, தானாக முன்வந்து எடுத்துக்கொண்ட ரிட் மனு ( எண். 574/2015-) படி வழங்கிய 75 வழிகாட்டுதல்களில், 33-வது வழிகாட்டுதல், ‘கோவில் நிலங்கள் எப்போதும் கோவில்களிடமே இருக்க வேண்டும்’ என்பது. ஆனால், மேற்கண்ட கரூர் நடவடிக்கை, அதற்கு எதிராக உள்ளது.


நிறைவேற்றப்படாத நிலை 


கடந்த மே, 29ல், புதிய அரசு பொறுப்பேற்ற ஒரு வாரத்திற்குள், ஐகோர்ட் மதுரைக் கிளையின் அமர்வு, நீதிபதிகள் சுவாமிநாதன், லட்சுமிநாராயணன் அமர்வு, (ரிட் மனு எண். 20764/2026-) அளித்த தீர்ப்பில், ‘ சிறிதளவு சமயச் சாயல் படிந்த பகுதிகூட செயல் அலுவலருக்குத் தடைசெய்யப்பட்ட பகுதியே. செயல் அலுவலர், கோவிலின் சமய நடவடிக்கைகளிலோ, மரபுகளிலோ, வழக்கங்களிலோ தலையிட முடியாது’ என, உத்தரவிட்டிருந்தது.


அவ்வாறிருந்தும், மதுரை மீனாட்சி கோவிலில், ஆகம விதிப்படி கண்டிப்பாக நிறைவேற்றப்பட வேண்டிய 48 நாட்கள் மண்டலாபிசேக பூஜையை, 15 நாட்களாகக் குறைத்தது அறநிலையத்துறை. பழனி கோவில் கும்பாபிசேகத்திற்கு பின் மண்டலாபிசேக பூஜைகளை, 3 நாட்களாக குறைத்து நீதிமன்றத்தில் குட்டு வாங்கிய தி.மு.க., அரசுக்கும், த.வெ.க., அரசுக்கும் என்ன வித்தியாசம்?


தி.மு.க., ஆட்சிகால சட்ட திருத்தங்கள் 


கடந்த தி.மு.க.,ஆட்சியில், 2026 சட்டசபை தேர்தலுக்கு முன் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தங்களும், அரசாணைகளும் அப்படியே தொடர்கின்றன.


கோவில் நிதியைப் பயன்படுத்துவது தொடர்பான திருத்தம், குத்தகை வாடகை நிர்ணயம் தொடர்பான திருத்தம், 2016 முதல் முன்தேதியிட்டு வாடகையைக் குறைத்து வழங்கப்பட்ட சட்டவிரோத அரசாணை, கோவில் பணத்தை நஷ்டத்தில் இயங்கும் தமிழ்நாடு பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷனில், நீண்ட கால வைப்பு செய்ய அனுமதித்த ஏற்பாடு போன்ற எதுவும் புதிய ஆட்சியில் ரத்து செய்யப்படவில்லை என்பதுதான் ஆச்சரியம்.


அப்படியென்றால், கோவில் நலனைப் பொறுத்தவரையில் தி.மு.க.,வும் – த.வெ.க.,வும் ஒரே கோணத்தில் தான் பயணிக்கின்றனவா என்ற கேள்வி எழத்தானே செய்யும். ஒரு புதிய அரசு, தான் கடுமையாக விமர்சித்த முந்தைய அரசின் இந்து விரோத சட்டத் திருத்தங்களை ரத்து செய்யவில்லை என்றால், அதை என்னவென்று சொல்வது? அமைச்சர் அறிவித்த minister_hrce@tn.gov.in என்ற முகவரிக்குப் புகார்கள் அனுப்பியவர்களுக்கு, ‘புகார் ஏற்பு ரசீது’ தகவல் கூட வரவில்லை. நிலை இவ்வாறு இருப்பின், அந்த புகார் மீது நடவடிக்கை எவ்வாறு எடுப்பார்கள்?


கடந்த 2021, ஜூன், 7ல், ஐகோர்ட் நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு தீர்ப்பில் சொல்லப்பட்ட 75 உத்தரவுகளில், ஒன்றைக்கூட நிறைவேற்றாமல், 5 ஆண்டு களாக நீதிமன்ற அவமதிப்பு செய்து வந்தது முந்தைய தி.மு.க., அரசு. அதையும் அவ்வாறே தொடர்கிறது புதிய த.வெ.க., அரசு. இந்த உத்தரவுகளை நிறைவேற்றினாலே கோவில்கள் பலன் பெறும்.


கடந்த செப்., 2ல், தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையர் இளம்பரிதி, ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தார்.


கோவில் நிலங்கள், அசையும், அசையா சொத்துக்கள், வங்கி வைப்புகள், குத்தகைதாரர் விபரங்கள், வாடகை நிலுவைகள், வரவு – செலவு கணக்கு விபரங்கள், தணிக்கை அறிக்கைகள், நன்கொடையாளர் விபரங்கள், அறங்காவலர் தீர்மானங்கள், அதிகாரிகளின் உத்தரவுகள் அரசாணைகள், சுற்றறிக்கைகள் குறித்த விபரங்களை தகவல் உரிமைச் சட்டம் பிரிவு 4-ன் கீழ், 90 நாட்களுக்குள் தானாக முன்வந்து வெளியிட வேண்டும் என்பது அதன் சாராம்சம்.


ஆனால், அறநிலையத்துறை அந்த தகவல்களை தர மறுத்ததால், 2000 மேல்முறையீடுகள் நிலுவையில் உள்ளன; அவற்றில் 90 விழுக்காடு கோவில் சொத்துக்கள் பற்றியவை. ஒரு துறை தன் சொத்துப் பட்டியலை மறைப்பதற்கு எந்தக் காரணமும் இருக்க முடியாது.


அரசு நினைத்தால் கீழ்கண்ட நடவடிக்கைகளை 6 மாதங் களுக்குள் அமல்படுத்த முடியும்; அவை இதோ:


கடந்த ஆண்டில், ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுப்படி, 50 முக்கியக் கோவில்களின் தணிக்கை அறிக்கைகளை இணையத்தில் வெளியிடுதல். இதற்கு நிதியோ, கூடுதல் ஊழியர்களோ தேவையில்லை.


கரூர் நிலங்கள் மீதான பத்திரப் பதிவுத் தடை நீக்கக் கடிதத்தை திரும்பப் பெறுதல்.


இரண்டரை லட்சத்துக்குமேல் ஆண்டு வருமானம் உள்ள அல்லது, 50 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து உள்ள கோவில்களுக்கு பட்டய கணக்காளர்கள் மூலம் ஆண்டு தணிக்கை செய்தல்


தி.மு.க., ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தங்களையும், 2016 முதல் முன் தேதியிட்டு, வாடகையைக் குறைத்த அரசாணையையும் ரத்து செய்தல்; கோவில் பணத்தை அந்தந்த கோவிலின் கணக்குக்கு வட்டியுடன் தரச் செய்தல்


ஒவ்வொரு முக்கியக் கோவிலுக்கும், நிலுவையில் உள்ள தணிக்கை ஆட்சேபனைகளை, ஆட்சேபனை வாரியாகத் திருத்துவதற்கான காலக்கெடுவுடன் கூடிய செயல் திட்டத்தை வெளியிடுதல்; பிரிவு 90-ன் கீழ் பொறுப்பானவர்களிடமிருந்து இழப்பை வசூலித்தல்


தணிக்கை செய்யப்படாத 9,525 கோவில்களுக்கு காலக்கெடு அறிவித்தல்


தகவல் உரிமை ஆணையத்தின் 02.09.2026 உத்தரவை 90 நாட்களுக்குள் முழுமையாக நிறைவேற்றுதல்.


அமைச்சர் அறிவித்த, மின்னஞ்சல் முகவரிக்கு வரும் ஒவ்வொரு புகாருக்கும் ஒப்புதல் அறிக்கையும், 30 நாட்களுக்குள் நடவடிக்கை அறிக்கையும் அனுப்புதல்


2021, ஜூன் 7ல், ஐகோர்ட் அமர்வு பிறப்பித்த தீர்ப்பின் 75 உத்தரவுகளைச் செயல்படுத்துதல்.


இவற்றை எளிதாக அமல்படுத்த முடியும். இவை எதுவும் கொள்கை ரீதியான சர்ச்சைக்குரியவை அல்ல; நிர்வாக நடவடிக்கை தான்.


தவிர, கோவில் நிலம் கோவிலிடமே இருக்க வேண்டும். அதன் வருமானம் சுவாமிக்கு சேர வேண்டும்; அக வழிபாட்டில் அரசு தலையிடக் கூடாது; கணக்கு வெளிப்படையாக இருக்க வேண்டும். இதை செய் தால் த.வெ.க.,அரசு, தமிழக வர லாற்றில் தனி இடம் பிடிக்கும்.


அறநிலையத்துறை அமைச்சர், முதலில் தம் சொந்தத் தொகுதியான ஸ்ரீரங்கத்திலிருந்தே தொடங்கட்டும். அந்தக் கோ வி லின் 65 தணிக்கை ஆட்சேபனைகளையும் திருத்தட்டும். ஐம்பது ஆண்டுகளாக வாடகை இல்லாமல் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் 2.58 ஏக்கரின் வாடகையை வட்டியுடன் வசூலிக்கட்டும்.


அந்தக் கோ வி லின் தணிக்கை அறிக்கையை இணையத்தில் வெளியிடட்டும். ஸ்ரீரங்கத்தில் அது நடந்தால், தமிழகம் முழுதும் அது நடக்கும் என்று நம்பலாம்; இதைச் செய்யுமா தமிழக அரசு?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !