திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் சிறப்பு பள்ளியறை பூஜை
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், 50வது மாத சிறப்பு பள்ளியறை பூஜை நேற்று விமரிசையாக நடந்தது.
திருப்போரூரில் பிரசித்தி பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் மாதந்தோறும், அர்த்தஜாமம் மற்றும் பள்ளியறை வழிபாட்டு குழு சார்பில், பள்ளியறை பூஜை வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, 50வது மாதத்தை முன்னிட்டு சிறப்பு பள்ளியறை பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நேற்று இரவு நடந்தது. இதையொட்டி, இரவு 8:00 மணி முதல் சிவ கைலாய வாத்தியம் முழங்க விழா தொடங்கியது. அதை தொடர்ந்து, இரவு 8.30 மணிக்கு அர்த்தஜாம பூஜை நடைபெற்றது. பின் இரவு 9:00 மணிக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் கந்தசுவாமி பெருமான் எழுந்தருளினார். தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கந்தசுவாமியை தரிசித்தனர்.