கோத்தகிரி அருகே கோவில் நிலம் ஆக்கிரமிப்பு மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
கோத்தகிரி: கீழ் கோத்தகிரி அருகே கோவில் நிலம் ஆக்கிரமிப்பை கண்டித்து, மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், கீழ் கோத்தகிரி தூனேரி கிராமத்தில், லிங்காயத்து மக்கள் குலதெய்வமாக வழிபடும் ஸ்ரீ மகாலிங்கா சுவாமி கோவில் அமைந்துள்ளது. இப்பகுதியை சார்ந்தவர்கள் அல்லாத, மற்றவர்கள் ஆதி திராவிடர் என்ற போர்வையில், அரசு அதிகாரிகள் துணையுடன், கோவில் வழியாக சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு கண்டினம் தெரிவித்து, சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த, 14 ஊர் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், அரசுக்கு சொந்தமான, 8.50 ஏக்கர் மேய்ச்சல் நிலம், 1.50 ஏக்கர் வனக்காடு பகுதியை, கிராம மக்களுக்கு தெரியாமல், அரசியல் மற்றும் தனிநபர் தலையீட்டு காரணமாக, சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பகுதி, மக்கள் வாழ்வதற்கு பாதுகாப்பானது இல்லை என, அரசு எச்சரித்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, பேரிடரின் போது, மண் சரிவு ஏற்பட்டு, வீடுகள் சேதம் அடைந்து, இருவர் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.
கோவில் நிலத்தை மீட்க வலியுறுத்தி, கீழ்கோத்தகிரி கிராம நிர்வாக அலுவலகம் முன்பு, நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. லிங்காய்த்து சமுதாய சங்க துணை தலைவர் மணி வரவேற்றார். போராட்டக் குழு தலைவர் மணி மனோகரன் தலைமை வகித்தார். சமுதாயத் தலைவர் கோபால், கோவில் கமிட்டி நிர்வாகி கெம்பராஜ் ஆகியோர், முன்னிலை வைத்தார். சிறப்பு விருந்தினராக, ராஜேஷ் சுந்தர் கலந்துகொண்டார். இதில், லிங்காயத்து சமுதாயம் உட்பட, இதர சமுதாயத்தை சேர்ந்த, 14 ஊர் தலைவர்கள், பெண்கள் உட்பட, ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். போராட்டக் குழு தலைவர் மணி மனோகரன் கூறுகையில், கோவில் அமைந்துள்ள பகுதி புனிதமானது. ஆதிதிராவிடர் என்ற போர்வையில், தனிநபர்கள், தங்களது சொந்த நலனுக்காக, அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன், சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. பிரச்சனைக்கு, தீர்வு கிடைக்காத பட்சத்தில், போராட்டம் தொடரும் என்றார். சமுதாய பிரமுகர் ராஜேஷ் சந்தர் கூறுகையில், பேரிடர் பாதிப்பு ஏற்பட்டு, இருவர் உயிரிழந்த இந்த பகுதி மக்கள் வாழ்வதற்கு பாதுகாப்பாக இல்லை என அரசே அறிவித்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பு நிலுவையில் உள்ள நிலையில், இது போன்ற செயல்கள் நடப்பது கண்டனத்துக்கு உரியது. இப்பிரச்சனைக்கு அதிகாரிகள் தீர்வு காண வேண்டும். இல்லையெனில், போராட்டம் தொடரும் என்றார்.