மங்களூரில் ஏழுமலையான் கோவில் திருப்பதி கோவில் நிர்வாகம் திட்டம்
மங்களூரு: பெங்களூரை தொடர்ந்து மங்களூரிலும், திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்டப்படவுள்ளது. டிசம்பரில் அடிக்கல் நாட்டப்பட உள்ளது. இரண்டு ஆண்டுகளில் கோவில் கட்டும் பணி முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடக பக்தர்கள், ஏழுமலையானை தரிசிக்க, தொலைவில் உள்ள ஆந்திராவின் திருமலைக்கு செல்ல வேண்டும். அங்கு சென்றாலும் எளிதில் ஏழுமலையானை தரிசிக்க முடிவது இல்லை. அதிகமான பக்தர்கள் நெருக்கடி இருக்கும்.
பல மணி நேரம், நீண்ட வரிசையில் நிற்க வேண்டும். இதை தவிர்க்கும் நோக்கில் கர்நாடகா, தமிழகம், அசாம், மும்பை, பீஹார் உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில், ஏழுமலையான் கோவில் கட்ட, ஆந்திராவின், திருமலை திருப்பதி கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
பெங்களூரில் ஏற்கனவே ஏழுமலையான் கோவில் கட்டப்பட்டுள்ளது. மங்களூரில் இருந்தும் அதிக அளவிலான பக்தர்கள், திருப்பதிக்கு செல்கின்றனர். இவர்களின் வசதிக்காக, மங்களூரிலேயே ஏழுமலையான் கோவில் கட்ட திருமலை திருப்பதி கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதற்காக மங்களூரு புறநகர், சுரத்கல்லின் படகெக்கார் மலைப்பகுதியில், 10 ஏக்கர் நிலம் வழங்க, கர்நாடக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கூடுதலாக, 5 ஏக்கர் நிலம் வழங்கவும், தயாராக உள்ளது.
டிசம்பரில் கோவிலுக்கு அடிக்கல் நாட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு ஆண்டுகளில் கோவில் பணிகள் முடியும். பணிகள் முடிந்தால், கர்நாடகாவின் இரண்டாவது திருப்பதி ஏழுமலையான் கோவிலாக இருக்கும்.
இங்கு திருமண மண்டபமும் கட்டப்படும். இங்கு கூட்டு திருமணங்கள் நடத்த, வாய்ப்பு அளிக்கப்படும். திருப்பதியில் நடக்கும் சுப்ரபாதம், கல்யாண உற்சவம், பிரம்மோற்சவம் உட்பட அன்றாட சேவைகள் இருக்கும்.
மங்களூரை தொடர்ந்து பெலகாவியிலும் ஏழுமலையான் கோவில் கட்டவும், ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.