உடுமலை பொன்னாலம்மன்சோலையில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு
உடுமலை: மழை வேண்டி பாரம்பரிய முறைப்படி, மழைப்பிச்சை பெற்று, வேண்டுதல் பாடல்களுடன் பொன்னாலம்மன்சோலை கிராம மக்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.
உடுமலை திருமூர்த்திமலை அருகேயுள்ளது பொன்னலாம்மன்சோலை கிராமம். இக்கிராம மக்கள் மழை வேண்டி பாரம்பரிய முறைப்படி வழிபாடு நடத்தினர். மொடக்குப்பட்டி, கொடுங்கியம், ரெட்டிபட்டி, தீபாலபட்டி, சாம்பல்மேடு உள்ளிட்ட கிராமங்களில், மழைப்பிச்சை என்ற பெயரில் கஞ்சி தயாரிப்பதற்கான பொருட்களை பெற்றனர். தொடர்ந்து, திருமூர்த்திமலை அடிவாரத்திலுள்ள சுற்றுக்கோவிலுக்கு சென்று பல்வேறு வகையான கீரைகளை பறித்து வந்து, உப்பு சேர்க்காமல் கஞ்சி தயாரித்தனர். இந்த கஞ்சியை சுற்றுக்கோவிலில் படையல் இட்டு, மழை வேண்டி கும்மியடித்தனர். கோவிலில் சிறப்பு வழிபாட்டுக்கு பின், அனைவருக்கும் கஞ்சி பிரசாதம் வழங்கப்பட்டது. இவ்வாறு, செய்தால் மழை பெய்யும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.