சாய் பாதானந்தா திரைப்படம்; குரு பக்தியின் உச்சம்: திரை கலைஞர்கள் பாராட்டு
சென்னை: சாய்பாதானந்தா திரைப்படம் குரு பக்தியின் உச்சம் என, திரைப்பட கலைஞர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
ஸ்ரீ ராதாகிருஷ்ண சுவாமிஜியின், வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள, சாய் பாதானந்தா - அன்பின் துாதர் எனும், ஆன்மிக திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி, சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் பிலிம் லேப்பில் நேற்று நடந்தது.
கடந்த 1906ம் ஆண்டு திருச்சி அருகே உள்ள பொய்யாமணி கிராமத்தில் பிறந்தவர் ஸ்ரீ ராதாகிருஷ்ண சுவாமிஜி. ஷீரடி சாய்பாபாவை குருவாக ஏற்றுக்கொண்டு இறைவழி கடைப்பிடித்தவர், பொய்யாமணி செல்வர் எனப் போற்றப்பட்டார்.
பெங்களூரு சாய் ஸ்பிரிச்சுவல் சென்டரின் நிறுவனராகவும், மதராஸ் அகில இந்திய சாய் சமாஜத்தின் தலைவராகவும் பல ஆண்டுகள் சேவை ஆற்றிய இவர், நிபந்தனையற்ற அன்பை உலகிற்கு போதித்து வாழ்ந்து காட்டியவர். இவர் 1980 ஜன., 14ம் தேதி பெங்களூரில் மகா சமாதி அடைந்தார்.
அவரது ஆன்மிக வாழ்வை போற்றும் வகையில், இத்திரைப்படத்தை தயாரிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள் பேசியதாவது:
ஸ்ரீ ராதாகிருஷ்ண சுவாமிஜி அறக்கட்டளையின் அறங்காவலர் கிருஷ்ணகுமார்:
என் குருவின் வாழ்க்கை மற்றும் செய்தியை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற ஆசையே இத்திரைப்படம். சத்யஜோதி பிலிம்ஸ் முழுப் பொறுப்பையும் ஏற்று படத்தை உருவாக்கியது. இப்படைப்பு சிறப்பாக வந்துள்ளது. ஒவ்வொரு காட்சியும் குருவை மீண்டும் சந்தித்த உணர்வை ஏற்படுத்தியது. விரைவில் திரையரங்குகளிலும், ஓ.டி.டி., தளங்களிலும் வெளியாகவுள்ளது.
முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்: தனது குருவின் வாழ்க்கை வரலாற்றை மக்களிடம் கொண்டு சேர்த்து, அவருடைய வழிகாட்டுதல்களை மக்கள் பின்பற்ற வேண்டும் என்பதே இதன் நோக்கம். இத்தகைய அரிய முயற்சி யாராலும் எளிதில் செய்ய முடியாதது.
திரைப்பட இயக்குனர் சிறுத்தை சிவா: குருவை போற்றும் இத்திரைப்படம் முழுமையான ஆன்மிக அனுபவத்தை வழங்குகிறது. படத்தில் சுவாமிஜி கதாபாத்திரத்தில் நடித்துள்ள மவுலியின் நடிப்பு பாராட்டுக்குரியது. இசை, வசனம், திரைப்படம் என அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளது.
பாடகர் வீரமணி ராஜு: குருபக்தியின் உச்சத்தை வெளிப்படுத்தும் இப்படத்தில் பாடியது பெரும் பாக்கியம். குறிப்பாக, மகனின் இசையில் பாடியது மகிழ்ச்சி. பொய்யாமணி கோவிலில் இன்றும் தமிழ் ஆரத்தி ஒலிப்பது பெருமை அளிக்கிறது.