உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலமலை அடிவாரத்தில் வனத்துறையினர் கெடுபிடி; பக்தர்கள் ஏமாற்றம்

பாலமலை அடிவாரத்தில் வனத்துறையினர் கெடுபிடி; பக்தர்கள் ஏமாற்றம்

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பாலமலை வழியாக மேல்முடி ரங்கநாதர் கோயில் செல்ல விரும்பிய, 500 பக்தர்களை மட்டும் வனத்துறை அனுமதித்தது. அனுமதிக்காத பக்தர்கள், ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.


கோவை வடக்கு பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் பெருமாள் முடி, மேல்முடி ரங்கநாதர் கோயில்கள் உள்ளன. ஆண்டுதோறும் புரட்டாசி ஐந்து சனிக்கிழமைகளிலும், பக்தர்கள் இந்த மலை கோயில்களுக்கு செல்வது வழக்கம். கடந்த வாரம் பெருமாள்முடி கோயிலுக்கு சென்ற சென்னை பக்தர் மூச்சு திணறி உயிரிழந்தார். இதையடுத்து இவ்விரு மலை கோயில்களுக்கும் பக்தர்கள் செல்ல கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை கட்டுப்பாடு விதித்தது. மேல்முடி ரங்கநாதர் கோயிலுக்கு சின்னதடாகம் வழியாக செல்வதற்கு தடை விதித்தது. பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை வழியாக மட்டுமே, அதுவும், 500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என, அறிவித்தது. நேற்று காலை, 5:00 மணிக்கு பெரிய நாயக்கன்பாளையம் பாலமலை அடிவாரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மேல்முடி ரங்கநாதர் கோயில் செல்ல ஒன்று கூடினர். ஆனால், இரண்டரை மணி நேர தாமதத்துக்கு பின்னர், 7:30 மணிக்கு மலை மீது செல்ல, பெரியநாயக்கன்பாளையம் வனத்துறை அனுமதி வழங்கியது.



பக்தர்கள் பிளாஸ்டிக் பை, கண்ணாடி பாட்டில்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் கொண்டு செல்ல தடை விதித்தது. பக்தர்களின் பைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அவர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டு, காகித பைகள், துணி பைகள் வழங்கப்பட்டன. பாலமலை அடிவாரத்தில் சுகாதார துறையினர் சார்பில் பக்தர்களுக்கு ரத்த அழுத்த பரிசோதனை செய்யப்பட்டது. ரத்த அழுத்தம், 140க்கு மேல் இருந்தவர்கள் மலை ஏற அனுமதிக்கப்படவில்லை. பக்தர்களின் பெயர், வயது ஆகியவை குறிப்பேட்டில் பதிவு செய்யப்பட்டன. பக்தர்களிடம், 15 ரூபாய் வசூல் செய்யப்பட்டு, டோக்கன் வழங்கப்பட்டன. முதலில் வந்த, 500 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. சென்னை, பெங்களூர், கடலூர், வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பலரை வனத்துறையினர் அனுமதிக்காததால், ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதே போல ஆனைகட்டி அருகே உள்ள பெருமாள் முடி கோயில் செல்ல, 500 நபர்கள் மட்டும் அனுமதி என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், மலை கிராமமான சேம்புக்கரையில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அதிகாலையிலேயே குவிந்தன. கூட்டத்தை கட்டுப்படுத்த, 70 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆனாலும், கூட்டத்தை வழிநடத்திச் செல்வதில் சரியான திட்டமிடுதல் இல்லாததால் நேற்று காலை, 10:00 மணிக்கு பிறகு உடல் தகுதி உள்ள அனைத்து நபர்களையும் வனத்துறையினர் பெருமாள் முடி கோயில் செல்ல அனுமதி வழங்கினர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !