மதுரை கள்ளழகர் கோயில் பெயர்ப் பலகையில் தமிழ் மொழி நீக்கப்பட்டது என்பது பொய்; அறநிலையத்துறை
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. தமிழ் மொழி நீக்கப்பட்டதாக தனியார் செய்தி ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதும், திட்டமிட்டு உருவாக்கப்பட்ட போலியான செய்தியும் ஆகும். மக்களிடையே அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுவதாகவே கருத வேண்டியுள்ளது என அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஸ்ரீரங்கம் முதலிடத்தையும், காஞ்சிபுரம் அடுத்த இடத்தையும் மூன்றாவது இடத்தை அழகர்கோவிலும் பெற்றுள்ளன. பஞ்சாயுதம் (சங்கு, சக்கரம், கதை, வில், வாள்) தாங்கிய நிலையில் நின்ற திருக்கோலத்தில் பெருமாள் காட்சி தருகிறார்.பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 93 வது திவ்ய தேசம். இத்தகைய புகழ்பெற்ற இக்கோயிலில் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் தினமும் தரிசனம் செய்து வருகின்றனர். இக் கோயிலின் நுழைவு வாயிலில் மிகப் பிரமாண்டமான தோரண வாயில் உள்ளது. இதில் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என்று மூன்று மொழிகளிலும் ‘அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், அழகர்கோயில்’ என்று ஜொலிக்கும் வடிவில் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. ஆனால், தமிழ் மொழியில் எழுதப்பட்டிருந்த கோயிலின் பெயர் நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இந்தச் சம்பவம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்ரமேஷ் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.
அவர் இதுகுறித்து வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தனியார் செய்தி ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படத்தில், பெயர்ப் பலகையில் இடம்பெற்றிருந்த தமிழ் எழுத்துக்களை திட்டமிட்டு போட்டோஷாப் மூலம் மறைத்து, தமிழ் நீக்கப்பட்டது போன்ற ஒரு போலியான புகைப்படத்தை உருவாக்கி, அதனை உண்மையான புகைப்படம் போல சித்தரித்து செய்து வெளியிட்டுள்ளனர். மதுரை அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலின் பெயர்ப் பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த ஆண்டில் எப்படி பெயர் பலகை இருந்ததோ, அதே நிலையில் தான் தற்போதும் உள்ளது என்பதையும் தெளிவுபடுத்துகிறோம். பொய்யான புகைப்படத்தை உருவாக்கி, அதனை அடிப்படையாகக் கொண்டு போலியான செய்தியை பரப்பிய இந்தச் செயலுக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். என்று கூறியுள்ளார்.