மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம் செய்த கிராம மக்கள்: கிடாய் வெட்டி விருந்து
வேடபட்டி: குரும்பபாளையத்தில், கிராம மக்கள் மழை வேண்டி, தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்தனர்.
வேடபட்டி பேரூராட்சிக்குட்பட்ட குரும்பபாளையத்தில், இந்தாண்டு சரி வர மழை பெய்யாததால், வடகிழக்கு பருவ மழையில் நல்ல மழை பெய்ய வேண்டி, தவளைகளுக்கு திருமணம் செய்து வைக்க கிராம மக்கள் முடிவு செய்தனர். அதற்காக, ஆண் ஆண் மற்றும் பெண் தவளைகளை பிடித்து வைத்திருந்தனர். நேற்று மாலை, குரும்பபாளையம் ஊர்கவுண்டர் வீட்டில் இருந்து, ஆண் தவளைக்கு தங்க செயினும், பெண் தவளைக்கு தங்க நெக்லஸ், மல்லிகை பூ, ரோஜா பூ அணிவித்து, தர்மாக்கோல் மற்றும் தட்டு குச்சியால் செய்யப்பட்ட மாட்டு வண்டியில், ஆண் தவளையும், பெண் தவளையையும் வைத்து, தவில், நாதஸ்வரம் வாசித்து, மாப்பிள்ளை அழைப்பு நடத்தி, இரு தவளைகளையும், விநாயகர் கோவிலுக்கு, கிராம மக்கள் ஒன்று கூடி ஊர்வலமாக அழைத்து வந்தனர். அங்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, மங்கள வாத்தியங்கள் முழங்க, ஆண் தவளையை கையில் வைத்திருந்தவர், பெண் தவளைக்கு தாலி கட்டினார். அதன்பின், தவளைகளை கிராம மக்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று, சிறப்பு பூஜை செய்து, கிணற்றில் விட்டனர். அதனைத்தொடர்ந்து, கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டு மக்களும் வழங்கிய அரிசியை கொண்டு, சாப்பாடு தயார் செய்து, கிடாய் வெட்டி, இரவில் கிராம மக்கள் அனைவருக்கும், திருமண விருந்து நடந்தது.