1.08 லட்சம் தேங்காய்களால் லிங்கம் உலக நலன் வேண்டி சிறப்பு வழிபாடு
திருப்பூர்: உலக நலன் வேண்டி, 1.08 லட்சம் தேங்காய்கள், 5,008 புனித கலசங்களை சிவலிங்க வடிவில் அடுக்கி வைத்து, சுற்றிலும் தீபங்கள் ஏற்றி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ட்ரீம் இந்தியா அமைப்பு, திருப்பூர் உதயம் பவுண்டேஷன், சென்னி ஆண்டவர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் ஆகியன சார்பில், காசியில் உள்ள விஸ்வேஸ்வரர் கோவிலுக்கு தேங்காய்கள் மற்றும் புனித கலசங்கள் சமர்ப்பிக்கப்பட உள்ளன. இதையொட்டி, சூலுார் அருகே காங்கயம்பாளையம் கரிவரதராஜ பெருமாள் கோவில் அருகே நேற்று சிறப்பு ஆன்மிக நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்காக, மட்டை உரிக்காத 1,00,008 தேங்காய்கள் மற்றும் 5,008 புனித கலசங்கள் சிவலிங்க வடிவில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றைச் சுற்றிலும் தீபங்கள் ஏற்றி, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் மகா ஆரத்தி செய்து வழிபாட்டை நடத்தினார்.
பக்தி, மனிதநேயம், ஒற்றுமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை உலகுக்கு உணர்த்தும் நோக்கில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். பொதுமக்களும், பக்தர்களும் தேங்காய்களைக் காணிக்கையாகச் சமர்ப்பித்து வழிபாட்டில் பங்கேற்றனர்.