பாலக்காடு சாரதாம்பாள் கோவிலில் நவராத்திரி உற்சவம் தொடக்கம்: 21ல் வித்யாரம்பம்
பாலக்காடு: சிருங்கேரி சாரதா பீட சாரதாம்பாள் கோவிலில் நவராத்திரி திருவிழா தொடங்குகிறது.
பாலக்காடு - திருச்சூர் தேசிய நெடுஞ்சாலையில், சந்திரநகர் சாரதா நகரில் அமைந்துள்ள இக்கோவில் திருவிழா வரும் 21ம் தேதி வரை நடைபெற உள்ளதாகவும், அதுவரை தினமும் காலை 6:30 மணி முதல் கோவிலில் சிறப்புப் பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறும் என்றும் விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர். விழாவை முன்னிட்டு 11ம் தேதி மாலை 6:00 மணிக்கு பரதநாட்டியம் மற்றும் மோகினியாட்டத்துடன் 10 நாட்கள் கலை நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. தொடர்ந்து வரும் நாட்களில் பஜனை, கர்நாடக இசைக் கச்சேரி, பக்திப் பாடல்கள் மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் நாள்தோறும் மாலை 6:00 மணிக்கு அரங்கேறவுள்ளன. இத்தகவலை கோவில் நிர்வாக குழு அதிகாரி கரிம்புழை ராமன், விழாக் குழுத் தலைவர் வாசுதேவன் மற்றும் சந்தான கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்தனர். விழாவின் நிறைவு நாளான 21ம் தேதி காலை 8:30 மணிக்கு விஜயதசமி சிறப்புப் பூஜைகள் தொடங்குகின்றன. அன்றைய தினம் குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் வித்யாரம்பம் சடங்கு நடைபெற உள்ளதால், அதில் பங்கேற்க விரும்பும் பெற்றோர் முன்கூட்டியே தங்களது பெயர்களைப் பதிவு செய்துகொள்ளுமாறு கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
முன்பதிவு மற்றும் விவரங்களுக்கு 7012936696 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.