நவராத்திரி; பத்மனாபபுரம் அரண்மனையிலிருந்து சுவாமி விக்ரகங்கள் திருவனந்தபுரத்திற்கு பவனி
நாகர்கோவில்: திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜைக்காக பத்மனாபபுரம் அரண்மனையிலிருந்து சுவாமி விக்ரகங்களின் பவனி இன்று காலை புறப்பட்டது. இதையொட்டி மன்னரின் உடைவாள் வழங்கும் பாரம்பரிய சடங்கு அரண்மனை உப்பிரிகை மாளிகையில் நடைபெற்றது.
மன்னர் காலத்தில் திருவிதாங்கூர் தலைநகர் திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்ட பின்னர் பத்மனாபபுரத்தில் நடைபெற்று வந்த நவராத்திரி விழா திருவனந்தபுரத்தில் நடைபெற்று வந்தது. இதற்காக மன்னர் உத்தரவுப்படி பத்மனாபபுரத்தில் இருந்து சரஸ்வதி அம்மன், வேளிமலை முருகன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை விக்ரகங்கள் பவனியாக திருவனந்தபுரம் எடுத்துச் செல்லப்படும். மன்னர் ஆட்சி மறைந்த பின்னரும் இரு மாநிலங்களை இணைக்கும் விழாவாக இது நடைபெற்று வருகிறது. வரும் 12-ம் தேதி நவராத்திரி பூஜை தொடங்கும் நிலையில் இன்று காலை பத்மனாபபுரத்தில் இருந்து நவராத்திரி பவனி புறப்பட்டது. யானை மீது சரஸ்வதி அம்மனும் பல்லக்குகளில் முருகன், முன்னுதித்த நங்கை விக்கிரகங்களும் எடுத்துச் செல்லப்பட்டது.பத்மனாபபுரம் தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் கோயிலில் இருந்து சரஸ்வதி தேவி விக்ரகம் எடுத்து வரப்பட்டு யானை மீது ஏற்றப்பட்ட போது கேரள மற்றும் தமிழக போலீசார் துப்பாக்கியை வானை நோக்கி பிடித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து அரண்மனை முன் வாசலில் முறைப்படியான வரவேற்பு கொடுத்த பின்னர் பவனி புறப்பட்டது. முன்னதாக பத்மனாபபுரம் அரண்மனை உப்பிரிகை மாளிகையில் நடைபெற்ற சடங்கில் மன்னர் பயன்படுத்திய உடைவாளை கேரள வேவசம் போடு அமைச்சர் முரளிதரன் எடுத்து குமரி மாவட்ட தேவசம்போடு துணை ஆணையர் ஜான்சி ராணியிடம் ஒப்படைத்தார். இந்த வாள் ஊர்வலத்தின் முன்னாள் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்நிகழ்வில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் ஜெயக்குமார், குமரி மாவட்ட கலெக்டர் பிரதாப், எஸ். பி. அன்சுல் நாகர், பத்மநாபபுரம் எம்எல்ஏ செல்ல சுவாமி கேரள மாநிலத்தைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் பைஜூ வின்சென்ட் , ஹரிதரன்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இன்று குழித்துறையில் தங்கிய இந்த பவனி, இன்று நெய்யாற்றின் கரையில் தங்கி, நாளை மாலை திருவனந்தபுரம் சென்றடையும். அப்போது திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் பவனியை முறைப்படி வரவேற்று அழைத்து செல்வர். 12-ம் தேதி நவராத்திரி பூஜை தொடங்கும். தமிழகத்தில் வரும் 11ம் தேதியும், கேரளாவில் 12ம் தேதியும் நவராத்திரி பூஜை தொடங்குகிறது.