பக்தியே தமிழர்களின் அடையாளமான ஈடுபாட்டுக்கும் தெம்புக்கும் அடிப்படை; மலேசியாவில் சத்குரு பேச்சு
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, தமிழ் கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றி உள்ள பக்தி உணர்வு தான் என, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.
ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவின், மஹாசத்சங்கம், மலேசியாவில் உள்ள பத்து மலையில், கடந்த 8ம் தேதி கோலாகலமாக நடந்தது. இதில், சத்குருவின் சத்சங்கத்தை, மலேசியா மற்றும் ஆசிய- பசிபிக் பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கலந்து கொண்டு கேட்டனர்.
இச்சத்சங்கத்தில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பேசுகையில்,"தமிழ் தன்னார்வ தொண்டர்களை, அவர்களின் முகத்தை பார்க்காமலேயே, அவர்களிடம் இருக்கும் தெம்பு மற்றும் எதிலும் அவர்கள் காட்டும் ஈடுபாட்டின் மூலம் தமிழர்களை அடையாளம் காண முடியும். இந்த தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, தமிழ் கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள பக்தி உணர்வு. தமிழ்நாட்டின் அடையாளமே கோயில்கள். நமது கலாச்சாரத்தில் பக்தி என்பது ஒரு கருத்தாகவோ, யாரோ கற்றுக் கொடுத்ததாகவோ மட்டுமில்லை. மரம், மாடு, பாம்பு, மலை, மேகம் என, இயற்கையின் அம்சங்களையும், மனிதர்களையும் கூட வணங்கும் தன்மை உள்ளது. இளைஞர்கள் இடையே மனப்பிரச்சனை அதிகரித்து வருகிறது. பதின்ம வயது குழந்தைகள் தெம்பாகவும், உற்சாகமாகவும், ஆனந்தமாகவும் இருக்க வேண்டும். ஆனால், 15 வயதிற்குட்பட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இது அந்த குழந்தையை பற்றியது மட்டுமல்ல. நமது சமூகத்தை நாம் சரியாக வழி நடத்தவில்லை. இதற்குப் பின்னால் இருக்கும் அடிப்படையான பிரச்சனையை நாம் புரிந்து கொள்ளவில்லை என்பதை காட்டுகிறது. நமது சமூகத்தை சிறப்பாக வழி நடத்த வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது,"என்றார்.