இருளில் பள்ளியறை பூஜை!
சிவகாசி: மின்தடையால், சிவகாசி சிவன் கோயிலில் ஜெனரேட்டர் இயக்கததால், இருளில் நடக்கும் பள்ளியறை பூஜையில், பக்தர்கள் அவதியடைகின்றனர். சிவகாசியில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான விஸ்வநாதசாமி, விசாலட்சியம்மன் சிவன் கோயில் உள்ளது. இங்கு தினமும்அதிகாலை முதல் இரவு வரை நடக்கும் பூஜைகளில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வர். கோயிலில் இரவு 8 மணி முதல் 9 வரை மின்தடை செய்யப்படுகிறது. மின்தடை நேரத்தில் பக்தர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர். குறிப்பாக இரவு 8.40 மணிக்கு பள்ளியறை பூஜை நடப்பது வழக்கம். இப் பூஜையில் பங்கேற்க பக்தர்கள் திரளாக வருகின்றனர். தினமும் நடக்கும் பள்ளியறை பூஜையின் போது, விஸ்வநாதசாமி ,கருவறையில் இருந்து புறப்பட்டு பல்லக்கில் வீற்றிருக்க, சிவப்பு கம்பள விரிப்பில், வெண்சாமர வீசுதலுடன் சங்கு, மேளம் முழங்க, பக்தர்கள் பாடலுடன் கோயில் உள்பிரகாரத்தில் வலம் வந்து பள்ளியறைக்கு செல்வார். இந் நடைமுறையின் போது, கோயிலில் மின்சாரம் தடைபடுவதால், இருள் சூழ்ந்த நிலையில் சுவாமி வலம் வருகிறார். இருளால் பக்தர்கள் இடறி விழுகின்றனர். அதிகாலையில் நடக்கும் திருப்பள்ளி எழுச்சி பூஜை கூட , சில நாட்களில் இருளில் நடக்கிறது. கோயில் நிர்வாகத்தில் ஜெனரேட்டர் வசதி உள்ளது. மின்சாரம் தடைபடும் போது ஜெனரேட்டர் இயக்குவது இல்லை. பக்தர்கள் விபரம் கேட்டால், டீசல் வாங்கி கொடுங்கள் என்கின்றனர். சுவாமி, அம்பாள் கருவறையில் மட்டும், யு.பி.எஸ்., வசதி உள்ளது .அந்த வெளிச்சத்தில் சுவாமி கும்பிடுங்கள், என்கின்றனர். ,மின்தடையின் போது ஜெனரேட்டர் இயக்கி ,பக்தர்கள் மனம் நோகாதபடி, நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.