நவராத்திரி நான்காம் நாள்: பட்டாபிஷேக அலங்காரத்தில் மதுரை மீனாட்சி அம்மன்
மதுரை மீனாட்சி அம்மன் இன்று பட்டாபிஷேக கோலத்தில் காட்சியளிக்கிறாள்.
மலையத்துவஜ பாண்டியன் நடத்திய புத்திரகாமேஷ்டி யாகத்தில் பார்வதி மூன்று வயது குழந்தையாக தோன்றினாள். தடாதகை எனப் பெயரிட்டு வளர்த்தார்
மன்னர். வில், வாள் பயிற்சி, குதிரையேற்றம் போன்ற 64 கலைகளையும் கற்று முடித்தாள். வெற்றி மங்கையான தடாதகை பருவ வயதை அடைந்தாள். மன்னர், மகளுக்கு பட்டம் சூட்டி இளவரசியாக்கினார். இதனால் பாண்டிய நாடு ‘கன்னிநாடு’ என பெயர் பெற்றது.
கண் இமைக்காமல் குஞ்சுகளை பார்வையால் பாதுகாக்கும் மீன் போல, தடாதகையும் மக்கள் நலனில் அக்கறை கொண்டாள். இதனால், ‘மீன் போன்ற கண் கொண்டவள்’ என்னும் பொருளில் ‘கயல் கண்ணி’, ‘மீனாட்சி’ என பெயர் பெற்றாள். மதுரையும் ‘துாங்கா நகரம்’ என்றானது. ராஜ அலங்கார ஆடை, ஆபரணத்துடன் பாண்டியருக்குரிய வேப்பம்பூ மாலை சூடி பட்டாபிஷேக கோலத்தில் பவனி வரும் அன்னை மீனாட்சியைத் தரிசித்தால் மன நிறைவான வாழ்வு அமையும்.
பாட வேண்டிய பாடல்
குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடை கோலஇயல்
மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை; வந்து உதித்த
வெயிலாய் இருக்கும் விசும்பில்; கமலத்தின்மீது அன்னமாம்
கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே.