யானை முகத்தோனுக்கு ஆயிரத்தெட்டு அலங்காரம்..!
வேண்டிய வரங்கள் தரும் முழு முதற் கடவுளான பிள்ளையாருக்கு, விநாயகர், கணபதி, யானைமுகத்தோன், ஐங்கரன், கஜமுகன், கஜநாயகன், கணநாயகன், விக்னேஷ்வரன் என பல்வேறு பெயர்களை அலங்காரமாய் சூட்டி அழைத்து அழகு பார்க்கின்றனர் பக்தர்கள். இதற்கு ஒரு படி மேலே போய், பெயரில் மட்டுமல்ல, செய்யும் அலங்காரத்திலும் புதுமையாய் பல விதமான அலங்காரங்கள் செய்து, வழிபடுகின்றனர் தேனி பெத்தாட்ஷி விநாயகர் கோயில் பக்தர்கள்.ஆண்டுதோறும் முக்கிய நாட்களில், பல வகையான அலங்காரங்கள் செய்கின்றனர். அதுவும் எந்த அலங்காரம் செய்தாலும் எல்லாம் 1008 எண்ணிக்கையில் தான்.
தாமரை, செவ்வந்தி, டேலியா, ரோஜா என பூக்கள் மட்டுமல்ல மா, கொய்யா, அன்னாசி, வாழை, ஆப்பிள், சாத்துக்குடி, எலுமிச்சை என பழவகைகள் மட்டுமா, தேங்காய், சுரைகாய், கத்தரிகாய், முருங்கைகாய், கரும்பு, வெற்றிலை, அருகம்புல் மற்றும் முறுக்கு, லட்டு, அதிரசம் போன்ற பலகாரங்களுடன், கரன்சி நோட்டுகள் ,ஐந்து ரூபாய் நாணயம் என பல வித விதமாய் அலங்காரங்கள் சிறப்பாக செய்யப்படுகிறது. குறிப்பாக இந்த அலங்காரங்களை வருடப்பிறப்பு, தை, ஆடி மாத நான்கு வெள்ளி க்கிழமைகள், வைகுண்ட ஏகாதசி, திருவாதிரை, மதுரை மீனாட்சி திருக்கல்யாண நாள், விநாயகர் சதுர்த்தி, பண்டிகை நாட்களில் செய்கின்றனர்.பெத்தாட்ஷி விநாயகர் கோயில் தலைமை அர்ச்சகர் ராமச்சந்திரன் கூறுகையில், ""ஆயிரத்து எட்டு என்ற எண்ணிக்கையில் அலங்காரங்கள் செய்வது தனிச்சிறப்பு. பல ஆண்டுகளாக செய்து வருகிறோம். அலங்காரம் செய்ய குறைந்தது இரண்டு மணி நேரமாவது ஆகும்,என்றார்.
தொடர்புக்கு 99948 77505