மனசை லேசாக்குது மரம்..!
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் அமர்ந்து பூக்களை ரசிப்பது தனி சுகம். மனதில் உள்ள பாரம் மேகக்கூட்டம் போல பறந்தோடி விடும். ஒரு மேகக்கூட்டம் வந்து உங்களை முகத்தை நனைத்துவிட்டு போகும். இன்னொரு மேகக் கூட்டம் உங்கள் முகத்தை தடவி துடைத்து விட்டு போகும். இங்கு இயற்கையை ரசித்து இன்பம் பெறுவது அதிசய அனுபவம். கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா 20.5 ஏக்கர் பரப்பளவு உடையது. கொடைக்கானல் மலைப்பகுதியாக ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வனத்துறையினரால் பராமரிக்கப்பட்ட பகுதிதான் தற்போது பிரையண்ட் பூங்கா. 1930ல் ஆங்கிலேயே வனத்துறை ரேஞ்சர் எச்.டி.பிரையண்ட்டுதான் மலைப்பகுதியை சீரமைத்து பூங்காவாக வளர்த்தார். பூச்செடிகளின் மீது அவருக்குள்ள ஆர்வம்தான் பூங்கா அமைக்க, அவரை தூண்டியது. இவர்தான் ஒரு போதி மரத்தை பிரையண்ட் பூங்காவில் நட்டார். இவருக்கு பின்பு, 1961ம் ஆண்டு பிரையண்ட்பூங்கா தோட்டக்கலைத்துறையினர் கைக்கு வந்தது. பிரையண்ட் பூங்காவில் உள்ள போதி மரத்தில் அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்து சென்றால், மன அழுத்தத்தால் அவதிப்படுபவர்கள் விடுபடலாம். மது, போதைக்கு அடிமையானவர்கள் கூட இந்த மரத்தில் அமர்ந்து இனிமேல் பருக மாட்டேன், என சபதம் எடுத்துக் கொள்கின்றனர்.புத்தருக்கு ஞானோதயம் கிடைத்தது போல், இங்கும் பலரது வாழ்வில் இந்த போதி மரம் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. பிரையண்ட் பூங்காவிற்கு வரும் பலர், மலர்களை மட்டும் ரசித்து விட்டு, போதி மரத்தை மறந்து விட்டு செல்கின்றனர். இனிமேல் மறக்காமல், போதி மரத்தில், 5 நிமிடம் அமர்ந்து தியானம் செய்து பாருங்கள்!