உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாமதுரை போற்றுவோம் நிறைவு: வைகையில் மக்கள் வெள்ளம்!

மாமதுரை போற்றுவோம் நிறைவு: வைகையில் மக்கள் வெள்ளம்!

மதுரை: மதுரை வைகை ஆற்றில் திரண்ட மக்கள் கூட்டம், "மாமதுரை போற்றுவோம் நிகழ்ச்சியின் நிறைவு விழாவை கொண்டாடி மகிழ்ந்தது.மதுரையின் சிறப்புகளை நினைவூட்டும் விதமாக, மாமதுரை போற்றுவோம் விழா, பிப்., 7ல், தீபம் ஏற்றி தொடங்கப்பட்டது. பிப்.,8, 9ல், இன்னிசை அரங்கம், நாட்டார் நடன அரங்கம், சொல் அரங்கம், நாட்டிய அரங்கம், பட்டிமன்றம், கருத்தரங்கங்கள் நடந்தன. இறுதி நாளான நேற்று, "வைகையை போற்றுவோம் நிகழ்ச்சி நடந்தது. மாலை 5 மணிக்கு, வைகை ஆற்றின் நீராழி மண்டபத்தில் நடந்த "வைகை வழிநடைப் பயணம் கண்காட்சியை, அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார். டாக்டர் நம்பெருமாள் சாமி, தினேஷ் ஆகியோர் வைகை தீபம் ஏற்ற, ஒளிநடனக் காட்சி மற்றும் வாண வேடிக்கை நிகழ்த்தப்பட்டது.வறண்டு போயிருந்த வைகை ஆறு, மக்கள் வெள்ளத்தால் நிரம்பிப் போனது. சித்திரை திருவிழாவை நினைவுபடுத்தும் வகையில் திரண்ட மக்கள் கூட்டம், இறுதி வரை நிகழ்ச்சிகளை பார்த்து மகிழ்ந்தது. கலெக்டர் அன்சுல் மிஸ்ரா, மாநகராட்சி கமிஷனர் நந்தகோபால், மேயர் ராஜன் செல்லப்பா, விழாக்குழுத் தலைவர் கருமுத்து கண்ணன், துணைத் தலைவர்கள் வெங்கடேசன், பரத், ஊடகக்குழு ராஜ்சத்யன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். "இவ்விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படும், என, விழாக்குழுவினர் தெரிவித்தனர். மாமதுரை போற்றுவோம் நிகழ்ச்சியின் நிறைவு நாளில், வைகை ஆற்றின் கரை ஓரத்தில், ஏராளமான பெண்கள் தீபம் ஏந்தி வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !