உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / யானை சாணம் கிடைக்காததால் மெகா களிமண் அகல் விளக்குகள் தயாரிப்பு தாமதம்

யானை சாணம் கிடைக்காததால் மெகா களிமண் அகல் விளக்குகள் தயாரிப்பு தாமதம்

திருப்பரங்குன்றம்: யானை சாணம் கிடைக்காததால் விளாச்சேரியில் மெகா களிமண் அகல் விளக்குகள் தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.‌


விளாச்சேரியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் களிமண், காகித ஸ்கூல், சிமென்ட் மூலம் சீசனுக்கு ஏற்றார் போல் பொம்மைகள் தயாரிக்கின்றனர். இங்கு தயாரிக்கப்படும் பொம்மைகள், சுவாமி சிலைகள், அகல் விளக்குகள் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்கு செல்கின்றன. கார்த்திகை மாதத்தை முன்னிட்டு தற்போது களிமண்ணால் ஒரு இன்ச் முதல் அகல் விளக்குகள் தயாரிக்கப்படுகிறது. தென் திருப்பதி என போற்றப்படும் ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்ற இரண்டு அடி உயரம், 2 அடி அகலத்தில் 6 மெகா சைஸ் அகல் விளக்குகள் களிமண்ணில் தயாரிக்கப்படும். இந்த விளக்குகள் 30 லிட்டர் எண்ணெய் பிடிக்கும். மூன்று நாட்கள் தொடர்ந்து எரியும். இத்துடன் இரண்டு லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு அடி உயரத்தில் 25 விளக்குகளும், 100 மில்லி கொள்ளளவு கொண்ட 3,000 விளக்குகளும் திருவண்ணாமலை தீபத்திற்கு தயாரித்து அனுப்பப்பட்டு வருகிறது.


விளக்குகள் தயாரிக்கும் கவுரிசங்கர் கூறுகையில்: பரம்பரை பரம்பரையாக குடும்பத்துடன் களிமண் பொம்மைகள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். 32 ஆண்டுகளாக இந்த பெரிய களிமண் மெகா சைஸ் களிமண் அகல் விளக்குகள் ஆண்டுதோறும் தயாரிக்கிறோம். ஒரு அடிக்கு மேல் களிமண்ணால் விளக்குகள், சுவாமி சிலைகள் செய்வதற்கு களிமண்ணுடன் குறுமணல், யானை சாணம் சேர்க்க வேண்டும். திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் யானை முகாம் சென்றதால் அங்கிருந்து சாணம் பெற முடியவில்லை. 


இரண்டு ஆண்டுகளாக கள்ளழகர் கோயில், பிற பகுதிகளில் தனியார் யானை வளர்ப்பவர்களிடமிருந்து யானை சாணம் பெற்று வந்தோம். கடந்த ஆண்டு இருப்பு இருந்த யானை சாணம் மூலம் விளக்குகள் தயாரித்தோம். இந்த ஆண்டு இதுவரை யானை சாணம் கிடைக்கவில்லை. வெளியில் யானைச் சாணம் கேட்டுள்ளோம். விரைவில் கிடைத்துவிடும். அதன் பின்பு பெரிய அகல் விளக்குகள் தயாரிக்க உள்ளோம். அதுவரை 100 மில்லி கொள்ளளவு கொண்ட 3,000 விளக்குகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளோம். கடந்த ஆண்டு இதே நாளில் அனைத்து விளக்குகளும் தயார் நிலையில் வைத்திருந்தோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !