உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழனி கோவில் தங்கரத புறப்பாடு கட்டணம் ரூ.2,500 ஆக உயர்வு

பழனி கோவில் தங்கரத புறப்பாடு கட்டணம் ரூ.2,500 ஆக உயர்வு

பழனி: பழனி முருகன் கோவிலில் நேற்று முன்தினம் (நவ.,1) முதல் தங்கரத புறப்பாட்டில் பங்கேற்பதற்கான கட்டணம், 2,000 ரூபாயில் இருந்து, 2,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. எந்த முன் அறிவிப்புமின்றி உயர்த்தப்பட்ட கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என பக்தர்கள், ஹிந்து அமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.


திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோவிலில் தினமும் இரவு, 7:00 மணிக்கு தங்கரத புறப்பாடு நடக்கிறது. நுாற்றுக்கணக்கான பக்தர்கள், 2,000 ரூபாய் கட்டணம் செலுத்தி, தங்க ரதத்தை இழுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். ஒரு கட்டண சீட்டில், மூவர் தங்கரத புறப்பாட்டில் பங்கேற்கவும், ஐவர் சிறப்பு தரிசனம் செய்யவும் அனுமதிக்கப்படுவர். பக்தர்களுக்கு சிறப்பு பிரசாத தொகுப்பும் வழங்கப்படுகிறது. கடந்த, 2011-ம் ஆண்டு முதல், 15 ஆண்டுகளாக தங்கரத புறப்பாட்டில் பங்கேற்பதற்கான கட்டணம் உயர்த்தபடவில்லை. இந்நிலையில் விலைவாசி உயர்வு, பக்தர்களுக்கு தரமான பிரசாத பொருட்களை வழங்கும் நோக்கில் தங்கரதப் புறப்பாடு கட்டணத்தை, 2,000 ரூபாயி-ல் இருந்து, 2,500- ரூபாயாக அதிகரிக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. இதுகுறித்து, கடந்த ஜூலை மாதம் பக்தர்களிடம் கருத்துக்கேட்பு நடந்தது. அப்போது ஹிந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட பலரும் கட்டண உயர்வுக்கு ஆட்சேபனை தெரிவித்த நிலையில் நேற்று முன்தினம் (நவ., 1) முதல், தங்கரத புறப்பாடு கட்டணம், 2,500 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதுகுறித்து, கோவில் நிர்வாகம் எந்த முன் அறிவிப்பும் வெளியிடவில்லை. இந்த கட்டண உயர்வு, பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை திரும்பப் பெற வேண்டும் என பக்தர்கள், ஹிந்து அமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !